
posted 28th December 2022

சீனாவின் உதவி தூதுவர் ஹூ வெய் தலைமையிலான குழுவினர் இன்று (28) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். இவ்வாறு வந்தவர்களில் ஓர் அதிகாரி தமிழர் பாரம்பரிய உடையை அணிந்து வருகை தந்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர் கியூ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் நல்லூர் ஆலயத்துக்கு பட்டு வேட்டி அணிந்து சென்றிருந்தனர். இது தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் வந்த சீன உதவித் தூதுவர் குழுவினர் கோட்டையை சுற்றிப் பார்த்தனர். இதன்போது, “விடுதலைப் புலிகளுடன் இங்கு சண்டடை நடந்ததா?”, என்று அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அவர்களின் இந்தக் கேள்விக்கு “ஆம் நடந்தது”, என்று பதிலளித்தனர் பொலிஸார்.
சீனாவின் இலங்கைக்கான உதவி தூதுவர் ஹூ வெய், அரசியல் விவகார அதிகாரி லியோசொங் உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் புதன் (28) அன்று யாழ்ப்பாணம் வந்தனர்.
இவர்கள் கோட்டை பகுதியைப் பார்வையிட்டனர். கோட்டையிலிருந்தவாறே இந்திய கலாசார மையத்தையும் பார்வையிட்டவர்கள்.. அது தொடர்பாகவும் தகவல்களை கேட்டறிந்தனர்.
இதேவேளை, சீனத் தூதுவர் குழுவினர் நாளைய (29) தினம் வியாழன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை திறந்து வைப்பதுடன், 50 குடும்பங்களுக்கு உதவி திட்டங்களையும் வழங்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)