
posted 4th December 2022
“சமகால இளைஞர்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வழங்கி நிலையில் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கி வழிப்படுத்த வேண்டிய அவசிய நிலமைகள் உள்ளன” இவ்வாறு, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கூறினார்.
நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசியப் பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரின் பங்களிப்புடனும், எஸ்.எச்.எம். செய்யித் றஸ்மி மௌலானாவின் ஒழுங்கமைப்புடனும் அல் - அஷ்ரக் காசிமி மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் அஷ் ஷெய்க். அர்கம் நூராமித் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
மாணவர்களிடத்தில் ஓர் இலட்சியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி ஊக்கமுடன் செயற்பட்டால் உரிய பயனை அடைய முடியும். இதற்கான தன்னம்பிக்கை மாணவர்களிடத்தில் ஊக்கப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நிலமைகளுக்கு மாணவர்களை இட்டுச் செல்லும் போது பாரிய பிரச்சினைகள் தலை தூக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக சமகாலத்தில் குறுகிய காலத்தில் பணமீட்டும் நோக்குடன் போதை வஸ்த்து வியாபாரம் மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்க சிலர் முயல்வது மாணவ சமுதாயத்தை நோக்கிய பெரும் சவாலாகவுள்ளது. இதனால் பல்வேறு விபரீத நிலமைகள் ஏற்படவும் ஏதுவாகவுள்ளது.
இந்த வகையில் அல் - அஷ்ரக் பழைய மாணவர் சங்கத்தினரின் இன்றைய இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு மிகப் பொருத்தமானதும் பாராட்டப்பட வேண்டிய செயற்பாடுமாகும் என்றார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் உரையாற்றுகையில்,
மாணவர்களை எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து மாற்றி நேரிய சிந்தனைகளைக் கொண்டவர்களாக வழிகாட்ட வேண்டும். ஆன்மீகம், இறையச்சம் கொண்டவர்களாக அவர்களை மிளிரச் செய்வதன் மூலம் சரியான பாதைக்கு இட்டுச் செல்லலாம். இத்தகைய சிறந்த எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு நம் சகலரையும் சார்ந்ததாகும். இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் விசேட உரையும் ஆற்றினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)