
posted 10th December 2022
இலங்கையில் பிரபலமான கண்டி மாவட்டதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ். குவால்டீனின் மறைவுக்கு, ஊடகவியலாளர் அமைப்புக்கள் அனுதாபம் தெரிவித்துள்ளன.
கண்டி இராச்சியத்தின் பழைய பெயரான செங்கடகல பிராந்திய ஊடகவியலாளராக மிக நீண்ட காலம் (50 வருடங்களுக்கு மேல்) சேவையாற்றி பெயர் பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் குவால்தீனின் மறைவு குறித்து இலங்கை முஸ்லிம் மீடியாபோரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம், காத்தான்குடி மீடியாபோரம் உட்பட பல ஊடகவியலாளர் அமைப்புக்கள் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
மலை நாட்டில், கண்டி மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலம் பங்களிப்புச் செய்தவர்கள் வரிசையில் மர்ஹூம் எம்.எஸ். குவால்தீன் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ் குவால்தீன் கண்டி தென்னேகும்புறவில் வசித்து வந்த நிலையில் தலைநகரிலிருந்து வெளிவந்த, இன்றும் வெளிவருகின்ற பிரபல தமிழ் பத்திரிகைகளில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக செய்தியாளராகக் கடமையாற்றி வந்தார்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்ததால் ஊடகங்களிலிருந்து அவர் ஒதுங்கியிருக்க நேர்ந்தமை அவரது எழுத்துக்களை தேடிப்படிப்பதில் ஆர்வம் செலுத்திவந்த வாசகர்களுக்குக் கவலையளித்தது.
கண்டி நகரிலும், அயலூர்களிலும் ஏதும் சம்பவங்கள் நடந்தால், அங்கு சென்று செய்திகளைச் சேகரித்து அவற்றைச் சுடச் சுட ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் பெரிதும் கரிசனையாக இருந்தார். செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அவர் அதிகம் கவனஞ் செலுத்தி வந்தார்.
தனக்குப் பின்னர் அவரது ஊடகப் பணியை தொடர்வதற்கு புதல்வர் கே.ஏ, ரசூலை அவர் ஆரம்பத்திலிருந்தே நெறிப்படுத்தி வந்தார்.
கண்டி மாவட்டத்தில் ஊடகத் துறையில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து கடந்த சில வருடங்களில் உயிர் நீத்த ஊடகவியலாளர்களில் பாரிய வெற்றிடமொன்று ஏற்பட்டு இருக்கின்றது.
அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்குவானாக எனப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)