குடும்பத் தகராறில் குடித்தவர் தற்கொலை

குடும்பப் பிரச்சனை காரணமாக கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரத்துக்கு முன்னால் குடும்பஸ்தர் ஒருவர் போதையில் இருந்த வண்ணம் பாய்ந்து தனது உயிரை போக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் மன்னார் பகுதியில் திங்கள் கிழமை (19.12.2022) இரவு 7.30 மணியளவில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

புகையிரத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டவர் நல்லத்தம்பி நகுலேஸ்வரன் (வயது 37). இவர் உயிலங்குளம் பகுதியைச் சார்ந்த மணற்குளம் தண்ணீர்தாங்கி கிராமத்தைச் சார்ந்தவர்.

துயர் பகிர்வோம்

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தின்போது இவர் தலையில் தலை கவசம் அணிந்திருந்ததாகவும், அவ்வேளையில் மதுபோதையில் இருந்துள்ளதாகவும்,

புகையிரதம் தலைமன்னார் நோக்கி செல்லும் பொழுது இவர் ரயில் பாதையிலுள்ள கட்டையில் பியர் போத்தலுடன் குந்திக் கொண்டு இருந்ததாகவும் அப்பொழுது ரயில் சாரதி இவர் இருந்ததை அவதானித்து ரயில் ஒலியை ஒலிக்கச் செய்தும் ரயில் வேகத்தை குறைத்தும் வந்து கொண்டிருந்த பொழுது ரயில் அருகில் வந்ததும் ரயிலுக்கு முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்,

பின் இவரின் சடலத்தை உடன் ரயிலில் ஏற்றிக்கொண்டு மன்னார் புகையிரத நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ரயில் சென்றதாகவும் விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரனையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற்றது.

இம் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ். ஈ. குமணகுமார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவரின் மனைவி மற்றும் தாயார் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்படுவதாவது;

இறந்தவரை அவரின் மனைவி மற்றும் அவரின் தாயார் அடையாளம் காட்டினர்.

இறந்தவரின் மனைவி மேரி பிரேமணி நகுலேஸ்வரன் (வயது 29) சாட்சி அளிக்கையில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், தனக்கும் கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக தாங்கள் ஏழு எட்டு மாதங்களாக பிரிந்திருப்பதாகவும்,

இவரின் குடிபோதையினால், தங்கள் குடும்பங்களில் அடிக்கடி பிரச்சனைகள் தலைதூக்குவதும், பொலிசில் முறையீடுகள் செய்வதுமாக இருந்த நிலையிலேயே தாங்கள் பிரிந்து இருந்ததாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இறந்தவரின் தாயார் புஸ்பவதி நல்லத்தம்பி (வயது 57) சாட்சி அளிக்கையில்;

இறந்தவர் தனது மகன் எனவும், இவர் குடும்பத்துடன் பிரிந்துவந்து சில காலமாக என்னுடனே வசித்து வந்ததாகவும், இவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ முற்பட்டு வந்ததாகவும், ஆனால், அது கைகூடாத நிலையில் இவர் விரக்தியுடன் இருந்து வந்ததாகவும், இதனாலேயே இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இறந்தவரின் மனைவிதான் இவருடன் வாழ விருமபவில்லை என ஏற்கனவே பொலிசாரிடம் தெரிவித்திருந்தமையாலும், மகன் தன்னுடனே வாழ்ந்தமையாலும், சடலத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி தாய் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க சடலைத்தை தாயிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரணை அதிகாரி குமணகுமார் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

குடும்பத் தகராறில் குடித்தவர் தற்கொலை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)