
posted 2nd December 2022

கிழக்கு மாகாணத்தில் புதிதாக உதயமாகும் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் அறிமுக நிகழ்வுடன் கூடிய, முழுநாள் மாநாடு ஒன்ற எதிர்வரும் 4 ஆம் திகதி (ஞாயிறு) கல்முனையில் நடைபெறவிருக்கின்றது.
கிழக்கில் இயங்கிவரும் சிவில் அமைப்பான சமத்துவ முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டிலும், முன்னணியின் தலைவர் சட்டத்தரணி, டாக்டர் வை.எல்.எம். யூசுப் தலைமையிலும், இந்த அறிமுக நிகழ்வுடன் கூடிய மாநாடு நடைபெறவிருக்கின்றது.
கல்முனை ஆஸாத் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாக, மேற்படி சமத்துவ முற்போக்க முன்னணியின் அரசியல் பிரிவாக ஆரம்பிகக்ப்படும் சமத்துவ மக்கள் முன்னணி எனும் அரசியல் கட்சியின் அறிமுக நிகழ்வு இடம்பெறும்.
அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், கல்வி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான தெளிவூட்டல்கள் கருத்துப்பரிமாற்றங்களும், கலந்துரையாடல்களும் மாநாட்டில் இடம்பெறவுள்ளதாக தலைவர் டாக்டர். யூசுப் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம் புத்தி ஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என இருநூறு பேர் இந்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை சரியாகத் திருத்தி எழுதி பூனைக்கு மணி கட்டுவதற்காக, சமத்துவ முற்போக்கு முன்னணி இப்புதிய பயணத்திற்குத் தயாராகியுள்ளதாகவும், மக்களின் கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் சக்தியாக, தமது புதிய அரசியல் கட்சியான சமத்துவமக்கள் முன்னணி திகழ்ந்து முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கவும் முனைப்புடன் செயற்படவுள்ளதாகவும் டாக்டர். யூசுப் கருத்து வெளியிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)