
posted 17th December 2022
கிழக்கு மாகாணத்தில் இம்முறை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சிறப்புற நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 25 ஆம் திகதி (டிசம்பர்) கிறிஸ்மஸ் பண்டிகை அனுஷ்டிக்கப்படவிருப்பதால் தற்போதிருந்தே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியாதநிலை ஏற்பட்டிருந்த போதிலும் இம்முறை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மேற்படி மாவட்டங்களில் கிறிஸ்மஸ்கால வியாபார நடவடிக்கைகள் களைகட்டத் தொடங்கியுள்ளதுடன், கிறிஸ்மஸ்ஸையொட்டி விசேட விலைக் கழிவுகள், சலுகைகள், பரிசுகள் வழங்கல் என்பனவும் பல பிரபல வியாபார நிலையங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை நத்தார் தாத்தா, மற்றும் கிறிஸ்மஸ் மர அலங்காரங்களுடனும் வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக கிறிஸ்துநாதர் அவதரித்த வரலாறுகளை எடுத்தியம்பும் விசேட பாலன் கூடுகள் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுமுள்ளன.
அதேவேளை கிறிஸ்மஸ் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் இடம்பெறவுள்ளதுடன், விசேடமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களை நினைவு கூரும் விசேட ஆராதனைகளும் தேவாலயங்களில் இடம்பெறவுள்ளன.
கிறிஸ்மஸ் ஒளிவிழாக்களும் தற்சமயம் சில பிரதேசங்களில் ஆரம்பமாகியுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)