
posted 8th December 2022
கிழக்கிலங்கையில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாகத் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி ஏற்பட்டுவருடன் கடும் குளிருடனான காலநிலையும் ஏற்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்புறத்தே ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், கிழக்கின் கடற்பிராந்தியங்களில் சூறாவளி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமெனவும், கடற்றொழிலாளர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதய காலநிலை மாற்றம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றம் கொந்தளிப்பு நிலை காரணமாக கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதய நிலையில் பல பிரதேசங்களிலும் இரவிலும், காலை வேளைகளிலும் பெரும் பனிப்பொழிவும் ஏற்படுவதுடன், ஏற்படும் மூடுபனி நிலமை காலை வேளைகளில் பல மணிநேரம் நீடித்தும் வருகின்றது.
இதேவேளை கிழக்கில் பல பிரதேசங்களில் கடலரிப்பும் உக்கிரமடைந்துள்ளது. குறிப்பாக அண்மைக் காலம்வரை கடலரிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிந்தவூர்ப் பகுதியில் மீண்டும் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.
இந்த நிலமை காரணமாக கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரைவலைத் தோணிகள், இயந்திரப்படகுகளை கடற்றொழிலாளர்கள் மேட்டுப்பகுதிகளுக்கு நகர்த்தியுமுள்ளனர்.
இந்த கால நிலை மாற்றம் தொடரும் நிலமையே காணப்படுவதுடன், அம்பாறை மாவட்டத்தில் சிறு பயிராகவுள்ள பெரும் போக நெற்செய்கை மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்படலாமெனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)