
posted 24th December 2022

நாடளாவிய ரீதியில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கிறிஸ்தவ மக்கள் தயாராகியுள்ளனர்.
இம்முறை நாட்டின் பல பாகங்களிலும் கிறிஸ்மஸ்கால வியாபாரங்கள் களைகட்டியிருந்தன.
விஷேட விலைக் கழிவுகள், சலுகைகளை பிரபல வர்த்தக நிறுவனங்கள் அறிவித்திருந்ததுடன் விசேட பரிசுகளும் கிறிஸ்மஸ் காலத்தில் வழங்கப்படவும் ஆவன செய்யப்பட்டிருந்தன.
அதேவேளை கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் மரங்களிலான அலங்காரங்களுடன், அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும் காணப்படுவதுடன், அலங்கார மின் விளக்குகளும் பல இடங்களிலும் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலிமுள்ள பாடசாலைகள், முன்பள்ளிப் பாடசாலைகளிலும், மற்றும் கலாமன்றங்கள், அமைப்புகளின் ஏற்பாட்டிலும் கரோல் நிகழ்வுகளும், ஆராதனைகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலங்கங்களில் விசேட நள்ளிரவு ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நாட்டிலுள்ள கிறிஸ்த தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுத்தல் ஆராதனைகளின் போது பாதுகாப்புக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து தேவாயங்களிலுமுள்ள அருட்தந்தைகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் பணித்துள்ளார்.
இதற்கிடையில் கிறிஸ்மஸ், புது வருடம் உட்பட இந்த பண்டிகை காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்துவதில்லையென மின் சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று 24, 25, 26 மற்றும் 31 ஆம் திகதியும், ஜனவரி முதலாம் திகதியும் மின்வெட்டு அமுல் நடத்தப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)