
posted 12th December 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் குளிரால் 10 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரைப் பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.
மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்நகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகின்றன.
இந்த நிலையில், அவற்றை மீட்டு, தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)