
posted 11th December 2022
அண்மைய நாட்களில் பதிவாகும் காலநிலை மாற்றங்களினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மிருக மரணங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதன்படி, இதுவரை பதிவாகியுள்ள விலங்குகள் இறப்புகள் பின்வருமாறு.
- யாழ் மாவட்டத்தில் 49 கால்நடைகள், 17 ஆபத்தான நிலையில், 58 ஆடுகள் இறப்பு, 50 ஆபத்தான நிலையில்
- கிளிநொச்சி மாவட்டத்தில் 168 கால்நடைகள் மரணம், 159 ஆபத்தான நிலையில், 06 ஆடுகள் இறப்பு, 03 ஆடுகள் ஆபத்தான நிலையில்.
- முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 மாடுகள் இறப்பு, 159 நோய்வாய்ப்பட்ட மாடுகள், 42 ஆடுகள் இறப்பு
- வவுனியா மாவட்டத்தில் 21 கால்நடைகள் இறப்பு, 17 ஆபத்தான நிலையில், 85 ஆடுகள் இறப்பு
இதன்படி வடமாகாணத்தில் உயிரிழந்த மாடுகளின் மொத்த எண்ணிக்கை 358 ஆகவும், 352 மாடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
மேலும், அந்த மாகாணத்தில் இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 191 ஆகவும், 53 ஆடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ள பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 ஆகவும், ஆபத்தான நிலையில் உள்ள பசுக்களின் எண்ணிக்கை 352 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் 65 ஆடுகள் இறந்துள்ளன.
இந்தியாவை பாதித்த சூறாவளியுடன் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலை காரணமாக இந்த விலங்குகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து விலங்குகளின் மாதிரிகளையும் கால்நடை துறையினர் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு, போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டங்கள் அந்தந்த மாகாண கால்நடைப் பணிப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது குளிர்ந்த காலநிலை குறைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு அல்லது போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)