
posted 25th December 2022

இலங்கையில் கால நிலை சீரின்மைக்கு மத்தியிலும் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
நாட்டின் பலபாகங்களிலுமுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேடமாக மறை மாவட்டங்களிலுள்ள தேவாலங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதுடன்,
காலநிலை சீரின்மைக்கு மத்தியிலும் நத்தார் தாத்தாக்களின் பரிசுப் பொருட்கள் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் இனமத வேறுபாடுகளுக்கப்பால் மக்கள் பரஸ்பரம் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
கிறிஷ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவு திருப்பலியில் பெருந்தொகையான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இம்முறை மலையகத்திலும் கிறிஸ்மஸ் ஆராதனைகள் இடம்பெற்றதுடன், கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகளும் மலையகப் பிரதேசங்களில் இடம்பெற்றன.
சமூகத்தின் பின் தங்கிய மக்களுக்கு ஆதரவு வழங்குவோம் எனும் பெரும் நோக்குடன் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை கிறிஸ்தவ மக்களுக்கு நாட்டின் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமன்றி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கொழும்பு மாநகரம் மின் அலங்காரங்களால் மக்களைக் கவரும் வண்ணமும், இயேசுபிரானின் சிறப்பை உணர்த்தும் வகையிலும் காணப்பட்டன.
கிறிஸ்மஸ் மரங்களுட்பட பல மின் அலங்காரங்கள் கொழும்பு மாநகருக்குமெருகூட்டும் வண்ணம் முக்கிய பல இடங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சிகள் மக்களைக் கவர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)