ஒற்றுமையும், ஒன்றிப்பும் நிறைந்தவர்களாக நாம் மாற அழைக்கப்பட்டுள்ளோம் - மன்னார் ஆயர்

சட்டவிரோத கனியவள மண் அகழ்வு, காற்றாலை போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தும் எமது கரிசனைக்குரிய விடயங்களாக உள்ளன.

நம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையும் ஒன்றிப்பும் நிறைந்தவர்களாக நாம் மாற அழைக்கப்பட்டுள்ளோம்.

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்குமாறு இன்றைய அரசாங்கத்துக்கு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

“உள்ளத்தில் உறுதியற்றோரே திடன் கொள்ளுங்கள். அஞ்சாதிருங்கள். இதோ நம் கடவுள் வருவார்” என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு திருவருகைக்காலத் திருமடலில் தெரிவித்துள்ளார்.

இம் மடலில் ஆயர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

உலக மீட்பராம் இயேசுவினுடைய பிறப்பின் பெருவிழாவுக்கு நம்மை ஆயத்தம் செய்யும் காலமாக இத்திருவருகைக்காலம் நமக்கு தரப்படுட்டுள்ளது.

இக்காலத்தில் நாம் இயேசுவினுடைய இரண்டுவிதமான வருகைக்காக நம்மை ஆயத்தம் செய்ய கத்தோலிக்க மக்களாகிய நாம் அழைக்கப்படுகின்றோம்.

முதலாவது வருகையானது, வரலாற்றில் ஏற்கனவே நடந்தேறிய இயேசுவின் வருகையாகும். இவ்வருகையில் இறைவனாம் கிறிஸ்து மனிதவதாரமெடுத்து நம்மையெல்லாம் மீட்க வந்தார். இவ்வருகையை நாங்கள் அனைவரும் கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

இரண்டாவது வருகையானது, உலகின் படைப்புகளுக்கான நடுத்தீர்வையாகும். இந்நாளில் இறைவன் நடுவராகவும், நீதிபதியாகவும் திகழ்வார்.

நாம் அனைவரும் கூட்டொருங்கியக்கத் திருச்சபையாக மாறும் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கூட்டொருங்கியக்கத் திருச்சபையாக மாறவேண்டும் என்று திருத்தந்தையின் அறைகூவலை ஆண்டவரிடமிருந்து பெறுகின்ற ஓர் அழைப்பாக நாம் கொள்ளவேண்டும்.

ஆகவே நம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையும் ஒன்றிப்பும் நிறைந்த திருச்சபையாக நாம் மாற அழைக்கப்பட்டுள்ளோம்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

நாட்டின் இன்றைய சூழ்நிலை

நாட்டின் இன்றைய சூழல் தொடர்பாக மன்னார் ஆயர் தனது தவக்கால திருமடலில் மேலும் தெரிவிப்பதாவது.

இன்று இலங்கை நாடு என்றுமில்லாதவாறு பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பொருட்களின் விலைகள் மலைபோல் உயர்ந்துள்ளன.

இந்த பாரிய விலை உயர்வினால் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் நாளாந்த உணவிற்கே அல்லல்படுகின்றனர். இதுமட்டுமல்ல அத்தியாவசியச் சேவைகளின் கட்டண காரணமாகவும் சாதாரண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கடவுள் ஏழைகளின் மனிதனாக மாறுகின்றார். ஆகவேதான் அவர் தாழ்நிலைத் தீவனத்தொட்டியில் பிறந்தார். ஆகவே நாம் இதை உணர்ந்து தீவனைத்தொட்டிக்குச் சென்று ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்களை தேடிச் சென்று வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கும் ஏழைகளின் நிலை எம்மைத் தொட வேண்டும்.

இதனால் கிறிஸ்மஸ் விழாவையொட்டிய தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிப்பதன் மூலம் தேவையில் உள்ளவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

மேலும் தமது உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடுகின்றவர்களை பயங்கரவாதச் தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்துவைக்கும் கொள்கையை இன்றைய அரசு கைக்கொண்டிருக்கின்றது.

இது கண்டிக்கத்தக்கது. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்குமாறு இன்றைய அரசாங்கத்துக்கு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதற்காக நாம் நீதியுள்ள நடுவர் நீதியின் வெற்றி வாகையைத் தருவார் என்ற பவுலடியாரின் நம்பிக்கையோடு நம்மை நாம் இணைத்துக்கொள்வோம்.

Booking.com

மன்னார் மாவட்ட சூழ்நிலை

ஆயர் அவர்கள் மன்னார் மாவட்டச் சூழ்நிலையைப் பற்றி தனது மடலில் மேலும் தெரிவிப்பதாவது.

பெரும்போக வேளாண்மைக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்காலக்கட்டத்தில் சாதாரண விலைக்கு அரசாங்கம் வழங்கும் பசளைகள் விவசாயிகளுக்கு சிறிய ஆறுதலாக அமைந்திருக்கின்றன.

தனியாரிடம் பெறக்கூடிய உரத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் பெரும் பணச்செலவில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு நம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத கனியவள மண் அகழ்வு காற்றாலை போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தும் எமது கரிசனைக்குரிய விடயங்களாக உள்ளன.

போதைவஸ்துப் பாவனை நமது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ள நிலைமை அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

இத்தீமைகளுக்கு எதிராக அனைத்து இன மத சமூக மக்களோடும் இணைந்து நாம் கடுமையாகப் போராட அழைக்கப்படுகின்றோம்.

'உள்ளத்தில் உறுதியற்றோரே திடன் கொள்ளுங்கள். அஞ்சாதிருங்கள். இதோ நம் கடவுள் வருவார். நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள்' என இறை வார்த்தையை நம்புங்கள் என இவ்வாறு மன்னார் ஆயர் மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு எழுதியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.