
posted 30th December 2022

உலகத்தை கடந்து இந்த நாடு இருள் சூழ்ந்திருக்கும் இந்த காலத்தில் எமக்கு ஒளி தேவை. எமக்கு வாழ்வு தேவை. எமக்கு நிம்மதி தேவை. எமக்கு மகிழ்ச்சி தேவை. எம்மிடம் இருப்பது நம்பிக்கை மட்டுமே. ஆகவே நாம் எமது இறைவனிடம் இறஞ்சுவோம். நாம் அவரின் பிள்ளைகள்தானே என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் தெரிவித்தார்
மன்னார் பொது வைத்தியசாலையின் சுகாதார ஒன்றிய அமைப்பும், சுகாதார ஊழியர் ஒன்றியமும் இணைந்து புதன்கிழமை (28) கிறிஸ்மஸூடன் இந்த ஆண்டின் இறுதியின் ஒன்றுகூடல் நிகழ்வுகளைகளை நடாத்தினார்கள்.
இந் நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளாருடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதனும் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துநாயகம் அடிகளார் உரையாற்றுகையில்;
இந் நிகழ்விற்கு மன்னார் ஆயர் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருந்தபொழுதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை.
நாங்கள் இன்று இரு நிகழ்வுகளான கிறிஸ்மஸ் விழா ஒன்று, மற்றயைது வருடாந்த ஒன்றுகூடல் என்பனவாகும்.
நான் ஒரு ஆன்மீகவாதி என்பதனால் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்ட மாபெரும் இறைவாக்கினர்தான் எசாயா என்பவர். அவரின் வார்த்தையானது,
“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;”
“ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்.”
அவ்வாறாக, பேரொளியும், சுடர் ஒளியுமாகப் பிறந்த அக்குழந்தைதான் இறைவன் இயேசுநாதர்.
இந்த உலகமானது, 2022 ஆண்டிகள் கடந்தும் நம்பிக்கையின் விழாவான கிறிஸ்மஸ் விழாவைக் தொடர்ந்து கொண்டாடுகின்றது.
இருளில் நடந்த மக்களுக்கு ஒளி கொடுத்த விழா. நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை கொடுத்த விழா. விரக்தியில் இருந்த மக்களுக்கு விரக்த்தியை அகற்றிய விழா. அனைவரின் வாழ்க்கைக்கே அர்த்தத்தைக் கொடுத்த விழா. இன்றே உங்கள் அனைவருக்கும் நம்பிக்கையினை ஊட்டி, இனிப் பிறக்கப் போகும் புத்தாண்டிலும் அந்நம்பிக்கை மிகைப்படுத்த உதித்த ஒளியின் விழாவாகும்.
2023 ஆம் ஆண்டு எமது நாடு எப்படி இருக்கப் போகின்றது? எமது குடும்பங்கள் மீண்டும் வறுமைக்குள்ளிருந்து மீளுமா? எமது பிள்ளைகளைக் காப்பாற்ற முடியுமா? என்றவகையான எண்ணிலடங்கா கேள்விகளை மனதில் தாங்கி அங்கலாய்க்கும் மக்களுக்கு நாட்டில் மிக மோசமான நிலை உருவாகப் போகின்றது என்ற ஆய்வாளர்களின் கருத்துக்கள், ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போன்று’ இருந்தன.
எனவே, இறைவனிடம் எமக்குள்ள நம்பிக்கையை வைத்து, இரக்கமுள்ள நம் இறைவன் எப்பவும் எம்மைக் கைவிடமாட்டார் என்று 2023 ம் ஆண்டை வரவேற்போம்.
மன்னார் மாவட்டத்திலே முக்கியமான இவ் வைத்தியசாலையில், 500 க்கு மேற்பட்டவர்கள், வைத்தியர்களாகவும், தாதியர்களாகவும், சக ஊழியர்களாகவும் கடமை செய்கின்றார்கள். அனைவருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் மன்னார் மறைமாவட்டம் சார்பாக வழங்கி நிற்கின்றேன்.
நான் ஆன்மாவைக் காப்பற்ற அர்ப்பணிக்கப்ட்டவன். ஆனால், நீங்களோ உயிரைக்காப்பற்ற பிரமாணம் செய்து பணி புரிகின்றவர்கள்.
எனவே, இச்சிறிய உலகப் பயணத்திலே ஆன்மாவாலும், சதையினாலும் உருவாக்கப்பட்ட தூசிக்குச் சம்மான இம்மானிட உடலினைப் பாதுகாக்கும் பணியில் நீங்குளும், என்னைப் போன்ற துறவிகளும் இருக்கின்றோம்.
ஆகவே, இவ்வாறு பணிகளைச் செய்யும் நாம் இறைவனால் நிட்சயமாக ஆசீர் வதிக்கப்படுவோம்.
நாங்களோ துறவிகள். ஆனால் நீங்களோ குடும்பஸ்தவர்கள். உங்களுக்குள்ள குடும்பக் கடமைகளையும் செய்து இங்கு பணி செய்வதென்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
ஆகவே உங்கள் பணி மேலும் சிறக்க இறை வேண்டுதலுடன் வாழத்தி நிற்கின்றேன் என ஆசீர் கூறினார், அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)