
posted 31st December 2022

நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அரசாங்கம் நடாத்துமா? அல்லது இன்னம் ஒத்திவைக்குமா? என்பதே இலங்கை அரசியலில் முக்கிய பேச்சுப் பொருளாக இன்று உள்ளது.
நாட்டு மக்களை வறுமைக்கும், இத்தனை பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்கியோருக்கு வாக்குரிமை எனும் தமது ஜனநாயக உரிமை மூலம் தக்க பாடம் புகட்டுவதற்கு தேர்தலொன்றின் அவசியத்தை மக்கள் வேண்டி நிற்கும் அதேவேளை,
உள்ளுராட்சி மன்றத் தேர்தலையாவது உரியகாலத்தில் நடத்தியே ஆக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதுடன், தவறுமானால் அதற்காக நீதிகோரி வழக்காடவும், போராடவும் தயார் நிலையிலுள்ளதாக எச்சரிக்கை விடுத்த வண்ணமுள்ளன.
எதிர்வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து மாவட்டங்கள் தோறும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் நியமித்து உள்ளராட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல முக்கிய அரசியல் கட்சிகளும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவதுடன், கூட்டணிகளை அமைப்பதிலும், ஏன் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகளையும் ஆரம்பித்துள்ளன.
தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமக்குள் கூட்டணி அமைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாக அறியவரும் நிலையில் முஸ்லிம் கட்சிகளும் இத்தேர்தலுக்கு முகம் கொடுக்கும் விடயத்தில் உசாரடைந்துள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான) இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு, திருமலை மாவட்டம் உட்பட குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை நம்பி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வுருகின்ற போதிலும், அரசாங்கத்திடம் இத்தேர்தலை நடத்தும் ஆர்வம் இல்லையெனப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட வண்ணமுள்ளன.
ஆளும் பொது ஜன பெரமுன மீதும், ஜனாதிபதியின் ஐக்கிய தேசியக் கட்சி மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பும், ஆக்ரோசமும் இத்தேர்தலில் வெளிப்பட்டு தமது ஆதரவு நிலை குட்டுகள் அம்பலமாகிவிடும் அச்சநிலையே அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமெனக் கூறப்படுகின்றது.
இதனால் தான் தேர்தலை நடாத்தாது ஒத்திவைப்பதற்கு பகீரத சூழ்ச்சிகளை அரசு முன்னெடுத்து வருவதாக பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
அதேவேளை உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்க தரப்பு கருத்துக்களை வெளியிடவும் தவறவில்லை.
தேர்தலைத் தாமதித்தால் சர்வதேச உதவிகள் கிடைக்காது என்ற எச்சரிக்கைiயுயும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய வண்ணமுள்ளனர்.
தேர்தலை ஒத்திவைத்து மக்கள் ஆணையுடன் விளையாட வேண்டாமெனவும் ஜே.வி.பி. அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சர்ச்சை இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஊசலாடிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சமாச்சாரம் முடிவுக்கு வருமா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)