
posted 21st December 2022
தற்போது நடைமுறையிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் எல்லைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கேட்டு அறிந்து கொள்ளுமாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பி.எம். முஜீபுர் றஹ்மான் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (20.12.2022) எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைந்துள்ள கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொருளாளர் எம்.எச்.எம். ஹனானும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த எல்லை நிர்ணய செயற்பாடு என்பது தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு போலி செயற்பாடு எனவும் எல்லை நிர்ணய ஆணைக்குழவுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது எனவும் அங்கு சமூகமளித்திருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லை நிர்ணய பிரிப்பு செயற்பாட்டுக்கும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தேர்தலை நடத்துவதற்கும் பிற்போடுவதற்கும் தேர்தல் ஆணையாளருக்கே அதிகாரம் உண்டு என அவர் இதன் தொடர்பாக மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)