
posted 4th December 2022
கடந்த காலங்களில் காத்திரமான செயல்பாடுகளை தேசிய சமாதான பேரவையாகிய நாம் மேற்கொண்டிருந்தோம் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வாறு நாம் யாவரும் ஒன்றுபட்டு எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வோம் என தேசிய சமாதான பேரவையின் வடக்கு கிழக்கு செயல்திட்ட முகாமையாளர் எம். உவைஸ் தெரிவித்தார்.
தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் யூலி ஹொட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொலிசார் பலதரப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தேசிய சமாதான பேரவையின் வடக்கு கிழக்கு செயல்திட்ட முகாமையாளர் எம். உவைஸ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
தேசிய சமாதான பேரவையிக்கு தற்பொழுது வேலைப்பழு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே எமது நாடு பூராகவும் 14 சமாதான பேரவைகள் உருவாக்கி இருந்தோம்.
இப்பொழுது இக் குழுக்களுடன் மேலும் 14 இளைஞர் சமாதான பேரவைக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது நாடு பூராகவும் இந்த 28 சமாதான பேரவைகளுக்கும் பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
நாம் இவ்வளவு காலமும் சர்வமத குழுக்களுடன் இணைந்து மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் இந்த இளைஞர் குழுக்களையும் இணைத்து தேசிய சமாதான பேரவை மேற்கொள்ள திட்டங்கள் வகுத்துள்ளன.
சர்வமத குழுக்களுடன் இணைந்து செயற்படுத்தும் திட்டங்கள் தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகின்றபோதும் எதிர்காலத்தில் தொடர்ந்து அவற்றை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்கு இருக்கும் நாம் எமது மக்களின் சகவாழ்வுக்கான விடயங்களில் சவாலாக இருக்கும் விடயங்களை ஆராய்ந்து அவற்றைப்பற்றி ஆய்வு செய்வோம்.
தேசிய சமாதான பேரவை குழுக்களுக்கு ஏற்கனவே பல பயிற்சிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்தும் பயிற்சிகள் தேவைப்படுகின்றதா என்பதையும் இவ் அமர்வில் நாம் ஆய்வு செய்வோம்.
இதுவரைக்கும் 2025 ஆம் ஆண்டு வரை வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நாம் இப்பொழுது ஒரு நிலையான குழுக்களாக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் உண்டு.
நாம் கடந்த காலங்களில் காத்திரமான செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தோம் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வாறு நாம் யாவரும் ஒன்றுபட்டு எதிர்காலத்திலும் மேற்கொள்வோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)