
posted 26th December 2022

ஆழிப்பேரலை அனர்த்தம் (சுனாமி) ஏற்பட்ட 18 ஆவது வருட நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
உறவுகளை இழந்த பெருமளவானோர், உயிர் நீத்தவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபிகளில், மலர் வைத்து, ஈகைச் சுடரேற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாசல்களில் இறந்த உறவுகளுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
குறிப்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட ஜனாஷாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்மாந்துறை காட்டுப்பள்ளிவாசல் மையவாடியில் உறவினர்கள் திரண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தம் உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க பெரும்பாலானோர் தமது கவலையை வெளிப்படுத்திய காட்சி உருக்கமாக அமைந்திருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டதும், உயிரிழப்புக்கள் கூடியதுமான மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக் குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் முதலான பிரதேசங்களில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கல்முனை 1சீ கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் காவு கொள்ளப்பட்ட 599 பேருக்கென அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது நினைவு உரைகளும் இடம்பெற்றதுடன் பிரபல கவிஞர் பூவை சரவணன், இழந்த உறவுகள் குறித்த உருக்கமான கவிதை ஒன்றையும் வாசித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)