அவசர நோய்களுக்கானவை கிடைக்க உதவக் கோரிக்கை

அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழி வகை செய்ய வேண்டும் என அரசிடம் கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் முன்னெடுக்க்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரிலும் இடம்பெற்றது.

செவ்வாய் கிழமை (06.12.2022) காலை மன்னார் பெண்கள் ஒன்றியம் அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என அரசிடம் கோரிய நிலையில் மன்னார் நகரில் மன்னார் மாவட்டத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் ஒன்று கூடிய பெண்கள் இக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பதாதைகள் ஏந்தியவாறு அமைதியான போராட்டத்தின் போது தெரிவித்ததுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் மகஜரில் தெரிவித்திருப்பதாவது;

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய நாம் எமது இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைக்கின்றோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களாகிய நாங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம் பின் கொவிட் மற்றும் தற்பொழுது உள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் இந்நிலையில் தற்பொழுது நோய்களுக்கு மருந்து வகைகளும் பெற முடியாத நிலையிலும் இருந்து வருகின்றோம்.

அரச வைத்தியசாலைகளுக்கு நோய் தீர்க்கச் செல்லுகின்றபோது அங்கு மருந்துகள் அற்ற நிலையில் வெளியில் பணம் கொடுத்து மருந்துகள் பெறுவதற்கு பணிக்கப்படுகின்றபோதும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக நாய் பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கான மருந்துகளும் கிடைக்கப் பெறாமையால் உயிர்களை இழக்கும் நிலை எற்பட்டு வருகின்றது.

ஆகவே அரசு அத்தியாவசிய மருந்த வகைகளையும், மருத்துவ சாதனங்களையும் முழுமையாக உடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நிற்கின்றோம் என இப் போராட்டத்தின்போது தெரிவித்தனர்.

அவசர நோய்களுக்கானவை கிடைக்க உதவக் கோரிக்கை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)