அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அபாயம்

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தொடக்கம் இப்பிரதேசங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சில இடங்களில் வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

துயர் பகிர்வோம்

குளங்கள் நிரம்பியுள்ளதால் அவற்றை அண்டியுள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இங்கிருந்து வெள்ள நீரை அகற்றுவதற்காக அப்பகுதியிலுள்ள பெரிய வாய்க்கால்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

அதேவேளை, கல்முனையையும் கொலனிப்பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கிப்பால வீதி மற்றும் கல்முனை- அம்பாறை நெடுஞ்சாலையிலுள்ள மாவடிப்பள்ளி பாலம் என்பவற்றுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்காக தேவையேற்படின் சாய்ந்தமருது பிரதான முகத்துவாரம் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மேயர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் அடைபட்டுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருவதுடன் குறுக்கு வீதிகளிலும் சிறிய ஒழுங்கைகளிலும் அமைந்துள்ள வீடு, வளவுகளில் இருந்து வெளியேற முடியாதிருக்கின்ற வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருப்பதால், வடக்கு, கிழக்கு வட மட்டத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதுடன்,

50 மில்லிமீற்றருக்கும் கூடிய மழை பெய்யும் சாத்தியமிருப்பதாகவும் இலங்கையின் சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிகீன் தெரிவித்துள்ளார்.

தாழமுக்கப்பிரதேசமானது நாட்டின் மேற்கு – வடமேற்குத்திசையினூடாக மெதுவாக நகர்ந்து அடுத்துவரும் சில தினங்களில் இலங்கையின் கரைப்பகுதியைச் சென்றடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் இடைவிடாப் பெருமழையால் கிழக்கில் பொது மக்கள் வீடுகளிலேயே முடிடங்கிக் கிடக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அபாயம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)