அபிவிருத்தியா? அபகரிப்பா? தொடரும் மக்களின் எதிர்ப்பு
அபிவிருத்தியா? அபகரிப்பா? தொடரும் மக்களின் எதிர்ப்பு

அபிவிருத்தி என்னும் பெயரில் நறுவிலிக்குளக் கிராமத்தின் வளங்கள் பல வழிகளிலும் சுரண்டப்பட்டு வருகின்றது. இதற்கு எமது கிராமத்து மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என நறுவிலிக்குளம் மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டம், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கடற்கரைப் பகுதியில் மீன் பண்ணைகள் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்..

நறுவிலிக்குளம் கடற்கரைப்பகுதியில் ஒரு நபருக்கு ஐந்து ஏக்கர் வீதம் 25 ஏக்கர் நிலம் பட்டதாரி மாணவர்கள் 5 பேருக்கு மீன் பண்ணைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வோம்

இதற்கு நறுவிலிக்குளம் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள்.. இதன் காரணமாக ஒட்டு மொத்த அமைப்புகளின் கருத்துகளை அறிவதற்காக வெள்ளிக்கிழமை (30.12.2022) காலை 10 மணியளவில் நடைபெற்ற கிராம மட்ட அமைப்புகளின் கூட்டத்தில் அமைப்புகளின் நிர்வாகத்தினராலும், பொது மக்களினாலும் நறுவிலிக்குளம் கடற்கரைப் பகுதியில் மீன் பண்ணைகள் அமைப்பதற்கு எதிர்ப்புகள் தெரிவித்து கருத்துகள் வெளியிடப்பட்டன.

இக் கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் நறுவிலிக்குளம் கிராம அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்..

இக்கூட்டத்தின்போது இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகையில் அரசாங்கம் அபிவிருத்தி என்னும் பெயரில் எமது கிராமத்தின் வளங்களை பல வழிகளிலும் சுரண்டி வருகின்றது.

முதலில் வனவிலங்கு பறவைகள் சரணாலயத்தினர் கண்டல் தாவரங்கள் வளர்ப்பு என்ற போர்வையில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டன.

தற்போது மீன் பண்ணைகள் அமைப்பதற்கான சதித்திட்டங்கள் நடைபெற்று வருகிறன.

இதற்கு எமது கிராமத்து மக்களாகிய நாம் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். எமது நறுவிலிக்குளம் கிராமத்தை பொறுத்த மட்டில் நாங்கள் மீன்பிடி, கடற்தொழில், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வாழ்ந்து வருகின்றோம்.

இங்கு காற்றாலை கோபுரங்கள், பறவைகள் சரணாலயத்தினர், அபகரித்தது போக எஞ்சியிருக்கும் சிறு நிலப்பகுதியில் எமது கால்நடைகள் மேய்ச்சல் நிலமாகவும், கடற் தொழிலுக்குச் செல்லும் நடைபாதைகளாகவும் பயன்படுத்தி வருகிறோம்..

அந்த பகுதியில் மீன் பண்ணைகள் அமைப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன் மீனவர்கள் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.

ஐந்து பட்டதாரி நபர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக 350க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை கடற்தொழில் அமைச்சர் பாழாக்குகிறார்.

எமது கிராமத்திற்கு இயற்கையாகவே கிடைக்கும் அபிவிருத்தி வளங்கள் போதும். புதிய அபிவிருத்தி என்ற போர்வையில் இயற்கையாக கிடைக்கும் வளங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை..

அதுவும் குறித்த ஐந்து பட்டதாரி மணவர்களும் எமது கிராமத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் அயல் இடங்களைச் சார்ந்தவர்கள் என்பதனை மாவட்டச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புகளுக்கு முறையாக கடிதங்கள் எவையும் அனுப்பப்படவில்லை.

என்றாலும், இந்த மீன் பண்ணைகளை நறுவிலிக்குளம் பகுதியில் அமைப்பதற்கு முழு எதிர்ப்பினையும் மக்களாகிய நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, மக்களுக்காகத்தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மக்களுக்கு பிரியோஜனம் இல்லாத மக்களுக்கு விருப்பம் இல்லாததை அரசாங்கம் அடாத்தாக செய்ய முடியாது..

எனவே, கடற்தொழில் அமைச்சருடன் கிராம மட்ட அமைப்பினரை நேரடியாக கலந்துரையாட வைத்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்றார்.

அபிவிருத்தியா? அபகரிப்பா? தொடரும் மக்களின் எதிர்ப்பு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)