
posted 13th December 2022
தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக தமிழ் தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில் வடக்கு கிழக்கிலுள்ள புத்தி ஜீவிகள், உரிமை போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் வலியுறத்தியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம் பெற்ற விசேட ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளை பேச்சுவாத்தைக்கு அழைத்துள்ளார். இந்த அழைப்பு என்பது வடகிழக்கு தமிழர்களை மட்டுமல்ல உலக வாழ் தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் மீண்டும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கின்றோம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி ஆசனத்தை தக்கவைப்பற்காகவும், சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், தனது கட்சியை நிலை நிறுத்தவும் பல அரசியல் தேவைக்காக இப்படியான நாடகத்தை அவர் அரங்கேற்றி வருகின்றார்.
இது அவருக்கு புதிய விடையமல்ல. விடுதலைப் புலிகள் இருந்த காலப் பகுதியில் கூட பல பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்திருந்தார். அதன் விளைவு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். ஆகவே, இது தமிழர் தரப்பிற்கு புதிய விடையமல்ல. எனவே, இந்த அழைப்பிற்கு எவ்வாறு பதில் அளிக்க போகின்றோம் என்பதை தமிழ் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் தேசியம் சார்ந்த வடகிழக்கை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகள் அடிப்படை கொள்கையான சமஷ்டி முறையில் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள் என்பது வரவேற்கதக்கது. ஆனால், இந்த சமஷ்டி தொடர்பாக பேசுவதற்கு நிபந்தனையுடன் தான் போக வேண்டும் என ஒரு கட்சியும், இன்னொரு கட்சி ஒற்றையாட்சியை விட்டு வராத வரைக்கும் பேச்சுவார்த்தைக்கு போவதில் பயன் இல்லை என தெரிவிக்கின்றது.
எனவே, முதலில் தமிழ் தேசிய கட்சி தலைவர்கள் வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உரிமைக்காக போராடியவர்கள் புலம் பெயர் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றாக திரட்டி கலந்துரையாடலை நடாத்தி பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்புக்கு என்ன பதில் சொல்லவேண்டும்? என்ன அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை அமைய வேண்டும்? என தெளிவாக முடிவெடுத்து அதனை அரசுக்கு சொல்லியிருக்க வேண்டும்
இதை விடுத்து, தனித்தனியாக ஜனாதிபதியை சந்திப்பதோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று தனிதனியாக ஜனாதிபதியை சந்திப்பதாலோ தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பான பேச்சுவர்த்தையை குழப்பும் செயலாக அது அமையும்.
ஜனாதிபதி ஒற்றையாட்சியை ஒரு போதும் கைவிடப் போவதில்லை என்பது தெட்டத் தெளிவான உண்மை. அதேவேளை, எதிர்கட்சி தலைவர் சஜித் மற்றும் ஜேவிபி கட்சிகள் தற்போது 13றாவதை தூக்கிப் பிடிக்கின்றனர். எனவே, 13 என்பது எங்களுக்கு இடைக்கால தீர்வு.
ஆகவே, தமிழ் கட்சிகள், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளைச் சார்ந்வர்களை ஒன்றாகக் கூட்டி பேச்சுவார்த்தையில் எதனை வலியுறுத்த வேண்டும் என்பதை பொது வெளியில் பகிரங்கப் படுத்த வேண்டும்
பொதுவெளியில் பகிரங்கப்படாமல் இந்த கூட்டங்கள் மூடிய அறைக்குள் நடாத்தப்படுமாக இருந்தால் இதனை இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சர்வதேச அளவில் அறிவிப்பார்கள் என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.
கடந்த தேர்தலில் கிழக்கை மீட்போம் என்று சொல்லி ஒரு கட்சி மட்டக்களப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். எனவே, அவர்கள் கிழக்கை யாரிடமிருந்து மீட்கப் போகின்றனர். இதனை மக்கள் தெளிவாக சிந்திக்கவேண்டும்? வடகிழக்கு தான் சமஷ்டி. அந்த சமஷ்டி என்பது வடக்கும் கிழக்கும் சேரும் போது தான் உருவாக்க முடியும.
அதைவிடுத்து பிரதேசவாதம், மதவாதம் பேசி வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்படுமாக இருந்தல் கிழக்கு இதேமட்டத்தில் தான் இருக்கும். இதனை மக்கள் உணர்ந்து தமிழ்தேசியம் சாந்து செயற்படவேண்டும்.
அதேவேளை வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கம் என்பது மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தென்னிலங்கையில் வியாபாரம் மற்றும் கடன் வழங்குநர்களாக வந்தவர்கள் நல்லாட்சி காலத்தில் தமது இருப்பை பலப்படுத்திய சீனா இன்று ரணில் ஆட்சியில் வடகிழக்கில் அதிகமாக கால்வைக்க முனைகின்றனர்
வடக்கில் கடலட்டைகள் என்ற பேர்வையில் கடற்தொழில் அமைச்சு மற்றம் பல்கலைக்கழகங்கள் ஊடாக வடக்கில் கால்பதித்துள்ளனர். அவ்வாறே கிழக்கில் திருகோணமலையிலும் இவர்களின் பிரசன்னம் அதிகமாக இருக்கின்றது.
எனவே, சீன- இந்தியா ஆதிக்கம் தொடர்பாக தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றாகக் கூடி தெளிவான முடிவெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் இந்தியாவை சரியாக கையாள தெரியாததால்தான் அதன் விளைவை அனுபவித்துள்ளோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)