அனுபவப் பகிர்வு

தமிழ் இலக்கிய உலகின் புகழ்மிக்க எழுத்தாளரும், ஈழத்தின் இலக்கியப் பேராளுமையுமான உமா வரதராஜன், கல்முனையில் நடைபெற்ற உலக கவிஞர் சோலைக்கிளியின் “தண்ணீருக்குள் எத்தனை கண்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு சிறுதொகுப்பு.

"சின்னச் சின்ன குச்சி மிட்டாய்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுவதற்கு நண்பர் சோலைக்கிளி என்னை இங்கே அழைத்திருக்கிறார்.

முதலிலேயே சொல்லி விட வேண்டும். நான் மிட்டாய்ப் பிரியனல்ல. நண்பரும் மிட்டாயில் நாட்டம் கொண்டவரல்ல. மிட்டாய்ப் பக்கம் நாங்கள் போகாததற்கான காரணம் என்னவென எங்கள் வைத்தியர் திருமதி. புஷ்பலதா லோகநாதனும் நன்கறிவார்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

நண்பர் சோலைக்கிளியின் அழைப்பிதழில் உள்ள இந்த ‘சின்னச் சின்ன குச்சி மிட்டாய் உரை’ என்பது இனிமையையும், சுருக்கத்தையும் விரும்பும் அவருடைய எதிர்பார்ப்பைக் குறிக்கிறது. ஆனாலும், கூடிய வரை என்னுடைய உரையை குச்சி மிட்டாயிலும் சிறிதாக்கி பல்லி மிட்டாயாய் ஆக்கிக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

இந்த நூலின் உருவாக்கத்திலிருந்து, இன்றைய வெளியீட்டு நிகழ்வு வரை அவரும் நானும் சேர்ந்து பெற்ற அனுபவங்கள் ஏராளம். ஒரே வேளையில் அவருடைய இந்தக் கவிதைத் தொகுப்பும், என்னுடைய கட்டுரைத் தொகுதியும் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு நூலாக்கத்துக்காகச் சென்றன.

இந்த நூல்கள் வர வேண்டுமென்பதில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்பி சரவணமுத்து நவநீதன் மிகவும் அக்கறை காட்டினார். இந்தப் பணியை அவர் மிகவும் காதலித்தார் என்று சொல்வது மிகையாகாது. அவர் தன் காலத்தில் பதித்துச் சென்ற பொற் தடங்கள் ஏராளம். அந்தத் தடங்களில் நண்பரின் இந்தத் ‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ தொகுப்பும் ஒன்று.

இந்த நூலாக்கத்தில் நாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். அச்சகம் ஒன்றில் எங்கள் நூல்கள் தயாராகிக் கொண்டிருந்தன. எங்களுக்கும் அந்த அச்சகத்துக்கும் முன் ஜென்மத்தில் ஏதோ விரோதம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மாதிரிப் பிரதிகளை அச்சிட்டு எமது பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள். எவ்வளவு அழகான சட்டைகளை அணிந்தவர்கள், அணிவித்தவர்கள் நாங்கள் ! எங்களுக்கு வெறும் பனியனை அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்?

அவற்றைப் பார்த்த நண்பர் சோலைக்கிளி ‘இந்தப் புத்தகங்களை இறுதி அஞ்சலிக்காக பொரளை மலர்ச்சாலை ஒன்றில் வைத்து விடுவோமா’ என்று கேட்டார்.

நான் அதனை மறுத்து ‘அதற்கு செலவாகும்... யாருக்கும் காண்பிக்காமல் நீங்கள் புத்தகங்களைக் கழியோடைப் பாலத்திலிருந்து வீசி விடுங்கள்....நான் கல்லடிப் பாலத்திலிருந்து எறிந்து விடுகிறேன் என்றேன்.

நல்லவேளையாக அப்படியெதுவும் நடக்காமல் மட்டக்களப்பு வணசிங்ஹ அச்சகத்தினர் எம்மைத் தடுத்தாட்கொண்டு , தேவையான சத்திர சிகிச்சை செய்து முண்டங்களுக்கு மூக்கு முழி வைத்து நாலு பேர் பார்க்கும் படி ஆக்கி விட்டார்கள்.

நண்பனும் ஒரு பெரும் கவிஞனுமான சோலைக்கிளியின் இந்தக் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘நானும் ஒரு பூனை’ வெளியாகி 37 வருடங்கள் ஆகின்றன. எங்கள் நட்பின் வயதும் அதுதான். இன்று அவருடைய 13 வது கவிதைத் தொகுப்பு வெளியாகின்றது.

படைப்பிலக்கியம் என்பதை அவருடைய வாழ்வின் ஒரு பகுதியாக மாத்திரம் காண்பது பொருத்தமாகாது. படைப்புக்காகத் தன்னை அர்ப்பணித்து அதில் அப்படியே தோய்ந்து கிடப்பவர் அவர். அவரே கூறுவது போல ‘அவருக்கும் கவிதைக்குமான உறவு தேங்காய்க்கும் அதனுள்ளிருக்கும் தண்ணீருக்குமான உறவு’ அல்லது ‘அலைக்கும் கடலுக்குமான உறவு’. நாட்டார் மரபும், சித்தர் மரபும் கலந்த ஓர் அபூர்வ கலவையாகவே அவரை நான் அடையாளம் காண்கின்றேன்.

ஏராளமாக எழுதுவது ஒருவரின் மன ஊற்றைப் பொறுத்த விஷயம். சுமார் மூன்று ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 178 கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது. கிட்டத்தட்ட வாரம் ஒரு கவிதை என்ற கணக்கில் இந்தத் தொகை வருகின்றது. இதில் அனுகூலமும் உண்டு. பிரதிகூலமும் உண்டு. காலத்துடன் ஒரு கலைஞன் நிகழ்த்தும் பந்தயத்தில் சில தொய்வுகள் அல்லது ஒன்றுகொன்று அண்மித்த தன்மைகள் இருக்க வாய்ப்புண்டு. இவ்வுலகின் பெருங் கலைஞர்களுக்கெல்லாம் இவ்வித அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன.

அனுபவப் பகிர்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)