
posted 16th December 2022
கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட விசேட அமர்வில், சபை அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கவரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் தக்க பதிலடி கொடுத்தார்.
இந்த சபையின் விசேட அமர்வில், மேயர் சடடத்தரணி ஏ.எல்.எம். ரகீபினால் பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாதீடு தொடர்பில் உறுப்பினர்கள் உரையாற்றினார்.
இதன் போது பாதீட்டை எதிர்த்து வாக்களித்த சாய்ந்தமருது தோடம்பழச் சின்ன சுயேச்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீம், உரையாற்ற ஆரம்பித்த போதே சபையில் பிரசன்னமாகவிருந்த ஊடகவியலாளர்கள் பக்கம் திரும்பி முரண்பாடான கருத்தை வெளிப்படுத்தினார்.
தனது உரையின் ஆரம்பத்தில் மேயர் மற்றம் உறுப்பினர்களை விழித்தவாறு ஊடகவியலாளர்களையும் விழித்துக் கொண்டார்.
இதன்போதே, மேயரின் செல்லப்பிள்ளைகளான ஊடகவியலாளர்கள், கடந்த ஐந்து வருடகாலமாக மேயருக்காக, மேயரின் கட்டுப்பாட்டிலிருந்து வருபவர்களெனத் குத்தலாக கூறி உறுப்பினர் அஸீம் உரையைத் தொடர்ந்தார்.
அஸீமின் இக்கூற்று சபையிலிருந்த ஊடகவியலாளர்களைக் கொதிப்படையச் செய்த போதிலும் ஆட்சேபிக்க முடியாத நிலையில் மௌனம் காத்தனர்.
ஆனால், அடுத்து உரையாற்றிய சபையின் பெண் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் அஸீமின் கூற்றுக்குத்தக்க பதிலடி கொடுத்தார்.
“எமது சபை அமர்வுகளுக்கு வருகை தரும் ஊடகவியலாளர்கள் இது வரை சுயாதீனமாகவே ஊடக தர்மத்துடன் செயற்பட்டுவருகின்றனர். எவரது கட்டுப்பாட்டிலும் அவர்கள் இயங்கவில்லை.
இந்த உயரிய சபையில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடக் கூடாது ஊடக வியலாளர்கள் தொடர்பில் அஸீமினால் தெரிவிக்கப்பட்ட முரண்பாடான கருத்துடன் நாம் உடன்படவில்லை” இவ்வாறு கூறி பதிலடி கொடுத்தார் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகாகாரியப்பர்!
இதனை மறுதலிக்காது மௌனம் காத்த உறுப்பினர் அஸீம் தனது உரையில், தம்மை தெரிவு செய்த மக்களுக்கு எதையுமே செய்ய முடியாது, வெறுமனே “சீரோக்களாக” இச்சபையில் தாமும் ஏனைய உறுப்பினர்களும் இருப்பதாகவும் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)