
posted 22nd December 2022

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதிகுடிகள் வாழ்ந்துவந்த மிகப்பெரும் பளங்கிராமங்களான அக்குறானை, முறுத்தானை, பள்ளத்துச்சேனை, வடமுனை போன்ற எல்லைப்புற கிராமங்களை கோறளைப்பற்று நகர்ப்புறங்களுடன் இணைப்புச் செய்யும் அக்குறானை பாலத்திற்கான வேலைகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அனைவருக்கும் தெரிந்திருக்கும் குறித்த எல்லைப்புற கிராமங்களுக்கான பாடசாலை கல்வி வசதிகள் உட்பட ஏனைய அரச சேவைகள் ஓரளவு ஒழுங்கு செய்து வழங்கப்பட்டுள்ள
போதிலும் குறித்த கிராமங்களுக்கு செல்வதில் காணப்படும் பலத்த சவால்களான பாதை சீரின்மை, பாதுகாப்பற்ற படகுகள் மூலமாக உயிரைப் பணயம் வைத்து ஆற்றை கடக்க வேண்டிய சூழ்நிலை போன்றவற்றின் காரணமாக ஆசிரியர்களும், அரச ஊழியர்களும் அச்சப்படும் நிலை காணப்படுகின்றது. அதே போன்றே உயர்தரத்தில் படிக்கின்ற மாணவர்களும், பாதுகாப்பற்ற படகுகள் மூலமே நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.. மேலும் உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் தமது உற்பத்திகளை சந்தைக்கு எடுத்துச்செல்ல ஆற்றினை சுற்றி பல மைல் தூரங்கள் சீரற்ற பாதை அமைப்பினூடாக நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
இவற்றை கருத்திற்கொண்டே மிக விரைவில் இவ் ஆற்றினை கடப்பதற்கான இரும்புப் பாலத்தினை அமைத்து கொடுக்க உத்தேசித்துள்ளோம். எனவே எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதிக்குள் குறித்த பால வேலைகளை முடித்து மக்கள் பாவனைக்காக கையகப்படுத்த முடியும் என நம்புகின்றேன் என்றார்
அப்பிரதேசத்திற்கான கள விஜயத்தின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியால் வர்ணகுலசூரிய, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பொன்னையா பரதன், நிறைவேற்று பொறியியலாளர் அருமைநாயகம் லிங்கேஸ்வரன் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)