
posted 31st December 2022

நாளை பிறக்கப்போகும் 2023 ஆங்கில புது வருடப் பிறப்பைக் கொண்டாடுவதற்கு இலங்கை மக்களும் தயாராகி வருகின்றனர்.
இந்தப் புதுவருடத்தை வரவேற்பதற்கு நாட்டின் தலை நகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் விசேட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக இன்று (31) நள்ளிரவு புதுவருடப் பிறப்பை வரவேற்பதற்கென விசேட இசை நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை 2023 புதுவருடத்தை வரவேற்கும் வகையிலான பதாதைகளும், மின் அலங்கார காட்சிப் படுத்தல்களையும் பல நிறுவனங்கள் செய்துள்ளதுடன்.
முக நூல்கள் மற்றும் தொடர்பாடல்களுடாக பரஸ்பர புதுவருட வாழ்த்துக்கள் பகிரப்பட்டும் வருகின்றன.
நாட்டின் முக்கிய ஊடகங்கள் குறிப்பாக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகள் கடந்து போகும் 2022 ஆம் வருடத்தில் நாட்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புக்களை சிறப்பு நினைவு மலர்களாக வெளியிட்டுள்ளன.
பிறக்கும் ஆங்கில புது வருடத்தையொட்டிய வாழ்த்துச் செய்திகளை இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரும் விடுத்துள்ளனர்.
“பொறுமையுடன் காத்திருந்த மக்களுக்கு எனது நன்றி” எனக்குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில்,
நாட்டின் நெருக்கடியான நிலையை ஏற்கனவே கடந்து விட்டதாக கருதுகின்றேன். இதனால் 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்பு முனையைக் குறிக்கும் தீர்க்கமான ஆண்டாக இருக்கும், புத்துணர்ச்சியுடன் புதிய ஆண்டு ஒன்று பிறக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
எமது தேனாரம் இணையம் சார்பாக அன்பு வாசகர்களுக்கும் அபிமானிகளுக்கும் 2023 புதுவருட நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)