
posted 13th December 2022

கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத்திட்டம்) எதிர்வரும் 15 ஆம் திகதி சபையின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
இந்த பாதீட்டை அங்கீகரிப்பதற்கான சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமயில் சபை சபா மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
15 ஆம் திகதி வியாழ்க்கிழமை பிற்பகல் இடம்பெறவிருக்கும் இந்த விசேட சபை அமர்வில் மேயர் றகீப் பாதீட்டை சமர்ப்பிக்கவுள்ளதுடன், பாதீடு மீதான உறுப்பினர்களின் உரைகளையடுத்து வாக்கெடுப்பின் மூலம் பாதீடு நிறைவேற்றப்படும்.
பெரும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இடம்பெறவிருக்கும் இந்த விசேட அமர்வில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட சாய்ந்தமருது தோடம்பழ சின்ன சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது பகிஷ்கரிக்கவுள்ளதாக தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதேவேளை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் நிலை குறித்து முக்கிய உறுப்பினரான ஹென்ரி மகேந்திரன் தெரிவிக்கையில்,
வழக்கமாக கட்சி தலைமைப் பீடத்தின் அறிவுறுத்தலுக்கமையவே பாதீட்டுக்கு ஆதவளித்து வருவதாகவும் இம்முறையும் இது விடயத்தில் தலைமைப் பீடத்தின் அறிவுறுத்தலை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
எனினும், தமிழரசுக் கட்சியின் இரு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களும் பாதீட்டுக்கு எதிராகவே வாக்களிப்பார்களெனவும் கூறப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் இந்த பாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்படுமெனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)