13ஆவது திருத்தத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்படவில்லை
13ஆவது திருத்தத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்படவில்லை

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை உள்ளடக்கவில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல். அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரப் பகிர்வில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

துயர் பகிர்வோம்

இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987.07.29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய 13வது திருத்தச் சட்டம் 1987.11.14ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் 1988ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு உட்பட மூன்று கட்டங்களாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டது.

மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் ஒரு வருடத்திற்கு மாத்திரமே இணைந்திருக்கும் எனவும், அதன் பின்னர் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன் மூலமே இணைப்பை நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி இரண்டு மாகாண சபைகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று இரண்டு சபைகளும் தீர்மானிக்கும் பட்சத்தில் இணைந்து செயற்பட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2006ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் படி வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டு, 2008ஆம் ஆண்டும் 2012ஆம் ஆண்டும் மாகான சபை தேர்தல் நடாத்தப்பட்டது என்பது நாடறிந்த வரலாறாகும்.

13வது அரசியல் திருத்த சட்டத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற சரத்து உள்ளடக்கப்பட்டிருப்பின் அதை மீட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது என்பது அரசியல் மாணவர்களுக்கு புரியும்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றுவாய் என்பது அதிகாரப் பகிர்வுடன் பின்னிப் பிணைந்து நிற்கின்றது. கட்சியின் ஸ்தாபகர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடைய காலத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட அரசியல் அபிலாசைகளும், கோட்பாடுகளையும் இன்றைய எமது தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னெடுத்துச் செல்வதில் எந்தக் கட்டத்திலும் பின்வாங்கவில்லை. ஆட்சி அதிகாரப் பகிர்வில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மறுதலிக்கப்படாத உரிமைகளை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இந்நிலையில் பருவமுற்றாத அரசியல் சிறு குழந்தைகள் அங்குமிங்கும் பீற்றித் திரிவதை நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அரசியல் சந்தர்ப்ப வாதிகளும் பதவியாசை பிடித்தவர்களும், கட்சியையும், கட்சியின் தலைமைத்துவத்தையும் பிழையாக சித்தரித்துக்காட்ட முற்படுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் கட்சியின் மீதும் தலைமைத்துவத்தின் மீதும் எப்போதும் விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்படவில்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)