
posted 18th December 2022
இனப்பிரச்சினைக்கான தீர்வை தேடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வ கட்சி மாநாட்டில் வடக்கு கிழக்கை நிரந்தரமாக இணைத்து 45 வீத கிழக்கு முஸ்லிம்களின் பரம்பலை 17 வீதமாக்கிய 13ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
13வது திருத்தச்சட்டம் என்பது தோற்றுப்போன ஒன்று என்பதுடன் இதுவே வடக்கு கிழக்கில் ஒற்றுமையாய் வாழ்ந்த தமிழ், முஸ்லிம்களை பிரித்து ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை இன்னமும் மாறவில்லை.
13வது திருத்ததின்படி பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டு முஸ்லிம்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை மூலம் முஸ்லிம்களும் உள் வாங்கப்பட்டு பின்னர் காரைதீவில் வைத்து முஸ்லிம் பொலிசார் தமிழ் இராணுவத்தால் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்ட வரலாற்றை கண்டுள்ளோம்.
வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட பின் இரு மாகாணங்களிலும் இரண்டு மாகாண சபைகள் இருப்பதுடன் ஓரளவு முஸ்லிம் தமிழ் ஒற்றுமை நிலவுவதை காண்கிறோம்.
13வதை முழுமையாக அமுல்படுத்தும் பட்சத்தில் முஸ்லிம்கள் மீண்டும் 17வீதம் ஆக்கப்படுவதுடன் அரச தொழில் வாய்ப்பு, காணி வழங்கல் போன்றவற்றில் 17வீதத்துக்குரியவை கிடைக்கும் நிலை ஏற்படுகிறது.
இது ஓர் இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்தும் முயற்சியாகும். ரவூப் ஹக்கீமின் கருத்து கிழக்கு முஸ்லிம்களை பாரிய அடிமைச் சாசனத்துள் தள்ளுவதாகும்.
ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசின் தலைவராகிய இந்த 23 வருட காலத்துள் முஸ்லிம் சமூகத்தின் ஒரு உரிமையைத்தானும் பெற்றுத்தராத நிலையில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் கொஞ்ச உரிமைகளையும் இழக்க வைக்கும் துரோகத்தை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)