வீடு தேடிவந்த வித்தகர் விருது
வீடு தேடிவந்த வித்தகர் விருது

ஹாஜியானிமைமூனாசெய்னுலாப்தீன்

நிந்தவூரைச் சேரந்த ஓய்வு நிலை அதிபர் “சாதனைச் சிகரம்” ஹாஜியானிமைமூனாசெய்னுலாப்தீன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இலக்கிய வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண (2020) தமிழ் இலக்கிய விழாவையொட்டி இலக்கியத் துறைக்கு ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த இலக்கிய வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் திருமலையில் நடைபெற்ற கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண தமிழ் இலக்கிய விழாவில் குறித்த தெரிவு செய்யப்பட்டோருக்கு வித்தகர் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், நடமாட முடியாத சுகயீனம் காரணமாக ஹாஜியானி செய்னுலாப்தீன் அங்கு சென்று விருது பெறமுடியாத நிலையிலிருந்தார்.

எனினும் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவினர் இலக்கிய ஆளுமை திருமதி. மைமூனா செயினுலாப்தீனின் வீடு சென்று குறித்த விருதினை நேரில் வழங்கி கௌரவித்தனர்.

நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ரீ. ஜெஷான் இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன், கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தலைமையில் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சிஹார், வீ. விக்னேஸ்வரன் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஹனிபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஸ்தாபகரான திருமதி மைமூனா செயினுலாப்தீன் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமைக்குரியவராகவும், தமிழ்ப் புலமைமிக்கவராகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வீடு தேடிவந்த வித்தகர் விருது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)