போதைப்பொருள் பாவனையால் மன்னாரில் எயிட்ஸ் நோய் தொற்றும் அபாயம் - வைத்திய நிபுணர் தக்ஷாயினி மகேந்திரநாதன்

வடமாகாணத்தில் 137 பேர் எய்ட்ஸ் நோயாளராக இனம் காணப்பட்டுள்ளபோதும் மன்னார் மாவட்டத்தில் 11 பேர் இந் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர். இம் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனைகளே இதற்கு காரணமாகும் என விஷேட வைத்திய நிபுணர் தக்ஷாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார்.

டிசம்பர் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்திலும் இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இத் தினத்தை முன்னிட்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன் அவர்கள் தலைமையில் அவரின் பணிமனையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாலியல் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் தக்ஷாயினி மகேந்திரநாதன் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

உலக எய்ஸ் தினமானது 1988ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் டிசம்பர் முதாலம் திகதி 'சமத்துவத்தை உருவாக்குவோம்' என்னும் தொனிப் பொருளில் இலங்கையிலும் இத் தினம் ஆனுஷ்டிக்கப்படுகின்றது.

இத் தினம் இலங்கையில் அனுஷ்டிக்கப்படும் இதே வேளையில் 4686 எச்.ஐ.வி நோயாளர்கள் 2022 டாவது காலாண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 3377 பேர் ஆண்களாகவும், 1309 பேர் பெண்களாகவும் காணப்படுகின்றார்கள். ஆண், பெண் விகிதாசாரத்தை நோக்கும்போது 7 க்கு ஒன்றாக காணப்படுகின்றது.

2022 டாவது காலாண்டு வரை வடமாகாணத்தில் எய்ட்ஸ் நோயாளர்களாக 137 பேர் காணப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் 11 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையும், ஆண்களுக்கிடையேயான பாலியல் தொடர்பு காரணமாகவும் எச்.ஐ.வி தொற்று இங்கு ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் முகமாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான விழ்ப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாக பல்வேறுபட்ட மட்டங்களில் நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் எச்.ஐ.வி நோயாளர்களுக்கான சிகிச்சை அவர்களுக்கான இரத்தப்பரிசோதனை ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்றைய எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விஷேடமாக நாங்கள் மன்னார் பிரந்திய போக்குவரத்து நிலையத்தில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையால் மன்னாரில் எயிட்ஸ் நோய் தொற்றும் அபாயம் - வைத்திய நிபுணர் தக்ஷாயினி மகேந்திரநாதன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)