
posted 31st December 2022

தெல்லிப்பளை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பளை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (30) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை தெல்லிப்பளை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?, இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு, எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?, அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய், தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)