
posted 11th December 2022
இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுள் ஒன்றான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில், கட்சியின் முக்கிய பதவிகளுக்கு கிழக்கிலங்கையைச் சேர்ந்த கட்சி முக்கியஸ்த்தர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இவ்வாறு கட்சியின் முக்கிய பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு கட்சித்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், கொழும்பு, களுபோவிலவிலுள்ள ரோஸ்வூட்சிலோன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் முகைதீன், தமிழ்நாடு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும், மாநாட்டில் கட்சியின் தேசியத்தலைவராக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதூன் தெரிவு செய்யப்பட்டதுடன்,
கட்சியின் செயலாளர் நாயகமாக சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீதும், கட்சியின் தவிசாளராக எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், கட்சியின் தேசிய அமைப்பாளராக அப்துல்லா மஹ்ரூபும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை கட்சியின் செயலாளர் நாயகமாக சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீதுடன், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்) தேசிய கொள்கை பரப்பு செயலாளராகவும், ஏ. அன்சில் பிரதி தேசிய செயலாளர், நாயகமாகவும் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் பிரதி தேசிய அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கட்சியின் முக்கிய பதவிகளை கிழக்கிற்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு அதிக பதவிகளை வழங்கியுள்ளமை பெரும் கௌரமான செயற்பாடெனப் பாராட்டுக்களும், மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் கட்சிகளுக்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த செயற்பாடு முன்மாதிரியானதும் எடுத்துக்காட்டானதுமென கிழக்கு முஸ்லிம்கள் கட்சித் தலைவருக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்துமுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)