
posted 22nd December 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000 ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இக்கொடுப்பனவு மீள அறவிடப்படமாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு ஹெக்டயர் அல்லது அதனிலும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாவும்,
ஒரு ஹெக்டயரிலும் அதிக நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நெல் விவசாயிகளுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெற்பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இப்பண உதவி வழங்கப்படவுள்ளதுடன், இவை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 08 இலட்சம் ஹெக்டயர் வயல் பரப்பில் பெரும்போகப் பயிர்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்கு அவசியமான எம்.ஓ.பி. உரத்தை கொள்வனவு செய்வதற்காகவே விவசாயிகளுக்கு இப்பண உதவி வழங்கப்படுகின்றது.
இதற்காக 08 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர விரைவில் இது தொடர்பாக ஊடக சந்திப்பை மேற்கொண்டு தெளிவுப்படுத்துவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)