புதுக்குடியிருப்பு பகுதியில் மனித எச்சங்கள்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சென்ற வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் இன்று வியாழன் (01) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்டன.

இதன்போது மூன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆண் மற்றும் பெண் ஒருவருடையதும் ஒரு சிறு குழந்தை ஒன்று என கருதப்படும் மனித எச்சங்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

வேலி புனர் நிர்மாணப் பணிகளுக்காக குழி தோண்டிய போது இந்த மனித எச்சங்கள் குறித்த காணி உரிமையாளரினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கு காவல் கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவிற்கமைய தோண்டும் பணிகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணியில் சட்ட வைத்திய அதிகாரி, புதுக்குடி பொலிஸார் உள்ளிட்ட பல தரப்புக்களும் பிரசன்னமாகியிருந்தன.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்களுடையதாகக் கருதப்படும் இந்த உடல் எச்சங்களுடன் இரண்டு சயனைற் குப்பிகளில் ஒன்று முழுமையாகவும் ஒன்று உடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பகுதியில் மனித எச்சங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)