பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஐ.நா. தூதரகம் பாராட்டு

கடந்த 17ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்கரையில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் படகு துரிதமாக மீட்கப்பட்டதை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் பாராட்டியுள்ளது.

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் விரைவான நடவடிக்கையை அந்த அமைப்புக்கள் பாராட்டியுள்ளன.

17ஆம் திகதி மாலை சுமார் 104 ரோஹிங்கியா அகதிகள் இலங்கையின் வடபகுதியில் - வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளிப்பதை உள்ளூர் மீனவர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் என்பனவற்றுக்கு தகவல் வழங்கினர்.

துயர் பகிர்வோம்

அத்துடன், உள்ளூர் மீனவர்களும் அங்கு மீட்பு நடவடிக்கைக்குச் சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் பத்திரமாக தரையிறக்ககப்பட்டகர்.
அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் இந்திரிகா ரத்வத்த கூறுகையில், “இலங்கை கடற்படை மற்றும் உயிர்களை காப்பாற்ற செயல்பட்ட உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். கடலில் ஏற்படும் துயரமான உயிரிழப்பைத் தடுக்க உடனடியாகவும் விரைவாகவும் செயல்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய மனிதகுலத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு”.

அகதிகளுக்கான ஐ.நா. தூதரக இலங்கை அதிகாரிகளும் அகதிகளின் உடனடித் தேவைகளுக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம், சட்டக் கடமைகள் மற்றும் மனிதாபிமான மரபுகளுக்கு இணங்க, படகுகளில் தத்தளித்து, துன்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றுமாறு அனைத்துப் பொறுப்புள்ள நாடுகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் மற்றொரு படகு பேரழிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022 ஆம் ஆண்டில் சுமார் 161 அகதிகள் கடலில் இதுவரை இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள பிரதேச சபை தேர்தல்

பிரதேச சபை தேர்தல் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் எதோ ஒரு வகையில் அவர்களது அபிப்பிராயங்களை கேட்கவேண்டிய நிலை வந்துவிட்டது. ஆகையால் பிரதேச சபை தேர்தலை விரைவில் நடத்தினால் நன்றாக இருக்கும் என சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை மஹாஜனா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை இப்போதைக்கு நடாத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. அவர்கள் தேர்தலை பிற்போடுவதற்குரிய வழிமுறைகளையே மேற்கொள்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு காலம் இருக்கின்றபடியால் பிரதேச சபை தேர்தல் கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு வேண்டுகோளை நாங்கள் முன்வைக்க முடியாது.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து பெரும்பான்மை ஊடாக அவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

அவரது ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் உள்ளன. அந்த காலம் முடிந்த பின்னர் தான் தேர்தல் வைக்க வேண்டும் என்பது சட்ட ரீதியாக இருக்கிறது. ஆகவே உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்றார்.



வெற்றிலைக்கேணிக் கடலில் தமிழக மீனவர்கள் 11 பேர் சிக்கினர்!

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணிக் கடற்பரப்புக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதன் (21) அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான தமிழக மீனவர்கள் 11 பேரும் கைப்பற்றப்பட்ட படகுடன் மயிலிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



பஸ் மீது கல் தாக்குதல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இரவு பஸ் ஒன்றின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ- 32 பாதை வழியாக சென்ற இ.போ.ச பஸ் மீதே இனந்தெரியாத நபர்களால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த போதிலும் அதில் பயணித்தவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)