
posted 8th December 2022
மருந்துகள் பற்றாக்குறை - கவனயீர்ப்புப் போராட்டம் - வவுனியா
மருந்து பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து வடக்கு-கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.
வவுனியா குருமன்காடு சந்தியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், ‘இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்’ என்ற பாதையை தாங்கியிருந்தனர்.
குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், பதினையாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி, ஜஸ் போதப்பொருள் பயன் படுத்தும்போது படமாக்கப்பட்ட படத்தட்டு ( சிடி) ஆகியனவும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்றைய தினம் 07.12.2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தருமபும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுடன் பெண் கைது
யாழ்ப்பாணம், குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட போதை தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணையும் , பெண்ணிடம் மீட்கப்பட்ட போதைப் பொருளையும் யாழ். மாவட்ட போதை தடுப்புப் பிரிவினர் மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பல நகரங்களில் மாசு நிறைந்த வளி மண்டலம்
கொழும்பு, கேகாலை, தம்புள்ளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மாறும் காற்றின் தர வரைபடத்தின்படி, பத்தரமுல்லை மற்றும் மன்னாரில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது.
காலை 6 மணி அவதானிப்புகளின்படி, பத்தரமுல்லை மற்றும் மன்னார் 118 என்ற எண் மதிப்பைப் பதிவு செய்தது. இது மிகவும் ஆரோக்கியமற்ற அளவை விட அதிகமானது.
ஊதா நிற எச்சரிக்கை, காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதைக் குறிக்கிறது, எண் நிலை 70 மற்றும் 87 க்கு இடையில் இருக்கும் போது வெளியிடப்படுகிறது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லை மற்றும் மன்னாரில் காற்றின் தரம் மட்டத்தை விட அதிகமாக உள்ளது.
இதேவேளை, கேகாலை, தம்புள்ளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளது.
பதுளையில் காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதாகக் கருதப்படுகிறது
மற்றும் காற்று மாசுபாடு சிறிய அல்லது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.
இதற்கிடையில், கொழும்பு மற்றும் பல முக்கிய நகரங்களில் காற்றின் தரம் அண்மைய நாட்களில் மோசமடைந்துள்ளதால் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதற்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் தலைநகரான டில்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கடையுடைத்து திருடியவர்கள் கைது
( வாஸ் கூஞ்ஞ) 08.12.2022
மன்னார் பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்து திருடப்பட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது;
மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணஇலுப்பைக்குளம் பகுதியில் 2022.10.22ந் திகதி அன்று கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பந்தமாக பாதிப்படைந்தவர் மடு பொலிசில் சம்பவம் அன்று முறைப்பாடு செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மடு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையின் கீழ் கொண்ட பொலிஸ் குழுவினர் அன்று தொடக்கம் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடிப்பதில் தீவிர வேட்டையில் இறங்கி இருந்தது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை (08) இரணஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது.
இச் சந்தேக நபர்களிடம் களவு இடம்பெற்ற கடையிலிருந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுமார் பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மடு பொலிஸ் குழுவினரால் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், தொடர்ந்து இவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் பாவனை - அதன் பல்வகைக் கண்ணோட்டமும்
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி . ஸ்ரீசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர். இ. சுரேந்திரகுமாரனும் கலந்து கொள்ளவுள்ளனர்
.
இந்நிகழ்வில்,
< “தற்காலத்தில் போதை பொருள் பற்றிய நிலவரமும் அது தொடர்பான எமது நடவடிகைகளும்” பற்றி வைத்தியர் க. குமரனும்
< “மனித உரிமைகளும் போதைப் பொருளுக்கு அடிமையாதலும்” பற்றி முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனும்
- “போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பான சட்டம் சார்ந்த ஓர் அறிமுகம்” பற்றி குற்றவியல் நீதிமன்ற நீதவான் அ .அ. ஆனந்தராஜாவும்
- “போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் உளவியல் அம்சங்கள்” பற்றி யாழ் போதனா வைத்திய சாலை மன நல வைத்திய நிபுணர் டி உமாகரனும்
கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
சிறுமியின் கரப்பத்திற்கு 73வயது முதியவர் கைது
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)