
posted 8th December 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் வரவு - செலவுத் திட்டம் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் 'பல்டி' அடித்ததால் 'பட்ஜட்' தோற்கடிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டக் கூட்டம் 07.12.2022 அன்று காலை 9:30 மணியளவில் நகரபிதா ஜோ. இருதயராஜா தலைமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது வரவு - செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்த நிலையில் நகர சபை செயலாளரால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 8 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும், ஈழ மக்கள் ஜநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவருமாக 7 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் அடிப்படையில் வரவு - செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டது என்று நகர சபை செயலாளர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மீளத் திருத்திய பாதீட்டைக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்து நகரபிதா கூட்டத்தை நிறைவு செய்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)