நிந்தவூரில் திடீர் கடலரிப்பு அனர்த்தம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடலரிப்பு அனர்த்தம் காரணமாக பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாகவும் வங்காலவிரிகுடாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவும் இப்பிரதேசத்தில் பெரும் கடல் கொந்தளிப்பும் கடல் பெருக்கமும் ஏற்பட்டுள்ளதன் காரணமாக திடீரென ஒரு பகுதியில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.

ஏற்கனவே நிந்தவூரின் சில பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு பாரிய கற்கள் போடப்பட்டு கடலரிப்பிற்கு தடையேற்படுத்தப்பட்டுள்ள போதிலும் தற்சமயம் நிந்தவூர் கடற்கரைப் பூங்காவிற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள உக்கர கடலரிப்பு காரணமாக பல மீனவ வாடிகள் தென்னந்தோப்புகள் உட்பட கடற்கரை வீதியும் இக்கடலரிப்பினால் அள்ளுண்டு செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரதேச மீனவர்களும், பொது மக்களும் பெரும் பரபரப்பிற்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு நிலமையை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் சக அதிகாரிகள் சகிதமும் பாதுகாப்பு தரப்பினருடனும் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

பிரதேச செயலாளர் லதீப் இந்த திடீர் கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் கடலரிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஆவன செய்துள்ளார்.

இதற்கமைய தற்சமயம் கடற்கரைவீதிவரை கடலரிப்பிற்கு உள்ளாகிய பகுதிகளில் அவசர நடவடிக்கையாக பாரிய கருங்கற்களை இட்டு கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடற்தொழிலாளர்கள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது தோணிகள் மற்றும் இயந்திரப்படகுகளை கடற்கரையை விட்டும் மேட்டுப் பகுதிகளை நோக்கி நகர்த்தியுள்ளனர்.

அத்துடன் இந்த நிலமை காரணமாக கடற்றொழிலும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் துறைமுக நிர்மாண பணிகளையடுத்து மிக மோசமாக நிந்தவூர் பிரதேசம் கடலரிப்பினால் கடந்த சில வருடங்களாக பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரில் திடீர் கடலரிப்பு அனர்த்தம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)