
posted 11th December 2022
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் தொடர்ந்து வருவதுடன், முக்கிய சில பிரதேசங்கள் இதனால் கடலரிப்பு அனர்த்தத்திற்கும் உட்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசம் உக்கிரகடலரிப்பு அனர்த்ததினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில்,
தொடரான அயல் பிரதேமசங்களான மாளிகைக்காடு, சாய்ந்தமருது, மருதமுனை முதலான பிரதேசங்களையும் கடல் சீற்றம் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
தற்சமயம் மேற்படி பிரதேசங்களிலும் கடலரிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மருதமுனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக, சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மருதமுனை வெளிச்ச வீடு கடலால் காவு கொள்ளப்படத்தக்க அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனினும் மருதமுனை மக்கள் அதிகாரிகளுடன் இணைந்து மண்மூடைகளை அடுக்கி பாதிப்பைத் தடுக்கும் தற்காலிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மிகமோசாக கடலரிப்பு பாதிப்பை எதிர்நோக்கிய நிந்தவூரில் கருங்கற்களையிட்டு கடலரிப்பிற்கு தடையேற்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.
வங்காள விரிகுடாவின் தென்பகுதியிலேற்பட்ட தாளமுக்கம் காரணமாக திடீரென கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு சீற்றமும், மூன்று தினங்களைக் கடந்தும் தணியாதுள்ளமை மக்களை அச்ச நிலமைக்கும் பெரும் அவலத்திற்கும் உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)