
posted 28th December 2022

“கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனைகள் ஈட்டப்பட்டு கிழக்கிற்கு பெருமை சேர்க்கப்படுவது பாராட்டத்தக்கதாகும். எனினும் இந்த சாதனைகள் தொடர்ந்தும் தக்க வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசா நாயக்க கூறினார்.
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப்யங் சமூக சேவைகள் அமைப்பு மாணவர் மகிமை “எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நடத்திய சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில், நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் விழா நடைபெற்றது.
விழாவில் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளரும், ஓய்வு பெற்ற சுங்கத்திணைக்கள பணிப்பாளருமான ஓ.எல். சப்ரி இஸ்மத், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் தம்பிலெவ்வை இஸ்மாயில், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். எம்.ஜே.இஸட் எம்.ஜமால்டீன், கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
2022 ஆம் ஆண்டுக்கான தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டியில் முதலிடம் பெற்று சாதனைபடைத்த நிந்தவூர் அல்-மதீனா தேசியப் பாடசாலை அணி வீரர்கள் (மாணவர்கள்) இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாசடாலை வீரர்கள் விழாவில் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
செயலாளர் திசா நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கிழக்கு மாகாணம் இன்று கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் தேசிய சாதனைகளை நிலை நாட்டி பெருமை சேர்த்து வருகின்றது.
குறிப்பாக ஜீ.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் கிழக்கு முதலிடம் பெற்றுள்ளதுடன், சாதாரண தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளிலும் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளது.
இந்தப் பெருமையை ஈட்டித் தந்த மட்டக்களப்பு, கல்முனை வலயங்களைப் பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அதேபோல் இன்று கௌரவிக்கப்படும் கபடி சாதனை மாணவர்களும் அதிபர், ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்களாவர்.
இதேவேளை நாம் ஈட்டிவரும், கல்வி மற்றும் விளையாட்டுத்தறை சாதனைகளைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் தொடர வேண்டும்.
மேலும் தேசிய ரீதியில் கபடி விளையாட்டுத்துறையில் சாதனைபடைத்துள்ள மாணவர்களைப் பாராட்டி கௌரவித்து ஊக்குவிப்பை வழங்கும் பெஸ்ட் ஒப்யங் அமைப்பின் இந்த செயற்பாடு முன்மாதிரியானது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)