
posted 10th December 2022
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரை விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளால் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 5000 ரூபாய்க் கொடுப்பனவு 2500 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீண்டும் 5000 ரூபாவாக அதிகரித்து வழங்கச் சம்பந்தப்பட்டோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)