
posted 20th December 2022
கிழக்கிலங்கையில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் ஏற்படடுள்ள தாளமுக்கம் காரணமாக அதிகளவான மழை வீழ்ச்சியும், பலமான காற்றும் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏற்பட்டுள்ள இந்த தாழ முக்கம் காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை (22.12.2023) வரை அதிக மழை வீழ்ச்சிக்கான சாத்தியங்களிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதிகளில் பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடக் கடலுக்குச் செல்வதை தவிர்த்து அல்லது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குளிர் நிலமை அதிகரித்துள்ளதால் இக்காலப்பகுதிகளில் கால் நடை வளர்ப்போர் மிகவும் கவனமாகப் பராமரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடியகால நிலை தொடருமானால் முக்கிய விவசாய மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிப்படையும் நிலை ஏற்படலாமெனவும் கவலை தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலும் இந்த நிலமையால் கடல் மீன்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன.
தற்சமயம் வரை 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)