காலநிலை - தாழமுக்கத்தின் தாக்கம்

வங்காள விரிகுடாவில் புதிதாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மத்திய பகுதி ஊடாக நகரும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது நாளை மறுதினம் வியாழன் நன்கமைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 23 அல்லது 24ஆம் திகதி நாட்டின் மத்திய பகுதியினூடாக ( தற்போதைய நிலையில்) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

உண்மையில் இந்த தாழமுக்கத்தின் நகர்வு பாதை தொடர்பாக உறுதியாக எதனையும் தற்போது கூறமுடியாது. எனினும், தற்போதைய நிலையில் இது இலங்கை ஊடாகவே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து கொண்டிருக்கும் மழை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

எனினும், நாளை முதல் 24ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் (21) முதல் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையான வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளுக்கான அதிகூடிய வெப்பநிலை குறைவாக பதிவு செய்யப்படும் என்பதனால் குளிரான வானிலை சில நாட்களுக்கு தொடரும்.

மேலும், திங்கள் (19) வரை வடக்கு மாகாணத்தின் மேற்பரப்பு நீர்நிலைகளில் பலவற்றுக்கு அவற்றின் முழுக் கொள்ளளவின் 60வீதம் கூட நிரம்பவில்லை. வழமையாக இக்காலப் பகுதிக்குள் வான் பாய்ந்திருக்க வேண்டிய பல குளங்கள் இன்னமும் தங்கள் கொள்ளளவின் 70 வீதத்தைக் கூட எட்டவில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் சிறுபோக நெற்செய்கை கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனினும், வடகீழ்ப் பருவக்காற்று மழை வீழ்ச்சியை பொறுத்தவரை 2023 ஜனவரி 20 வரை தொடர வாய்ப்புள்ளது. இக்காலப் பகுதியில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியே எங்கள் மேற்பரப்பு நீர்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்ட உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை - தாழமுக்கத்தின் தாக்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)