
posted 22nd December 2022

இந்தியா - இலங்கை இடையே அடுத்த மாதம் (ஜனவரி) பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இது காங்கேசன்துறை துறைமுகத்தையும் - இந்தியாவின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும்.
தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் பின்னர் விஸ்தரிக்கப்படும். அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யப்படும்.
இந்த சேவையின் கீழ் கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும். அத்துடன், பயணத்துக்கு மூன்றரை மணித்தியாலங்கள் பிடிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதே சமயம், இந்தியா - இலங்கை இடையே வத்தைகளே சேவையில் ஈடுபடும் என்று அண்மையில் தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் பயணிகள் கப்பல் சேவை நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)