ஆழிப்பேரலை நினைவு தினம் நாளை
ஆழிப்பேரலை நினைவு தினம் நாளை

ஆழிப்பேரலை அனர்த்தம் (சுனாமி) ஏற்பட்ட 18 ஆவது வருட நினைவு நாளை 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அதாவது கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் காலை மக்களின் வாழ்வுதனைப் புரட்டிப் போட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டது.

இதனால் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் பெரும் சொத்து சேதங்களும் ஏற்பட்டன.
இத்தகைய அனர்த்தத்தின் 18 ஆவது வருட நினைவே நாளை அனுஷ்டிக்கப்படுகின்றது.

துயர் பகிர்வோம்

குறிப்பாக ஆழிப்பேரலை காவு கொண்டோரை நினைவு கூறும் நினைவுத் தூபிகள் அமைந்துள்ள இடங்களில் உறவுகளின் பங்கு பற்றுதலுடன் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் மரணமடைந்த மூவாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களை (ஜனாசாக்கள்) நல்லடக்கம் செய்த சம்மாந்துறை காட்டுப்பள்ளி மையவாடியில் விசேட துஆப்பிரார்த்தனையும், கத்தமுல் குர்ஆன் ஓதிதமாம் செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்தோனோசியாவின் சுமத்ராதீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நில நடுக்கம் சுனாமி ஆழிப்பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்ததுடன், பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும், பல்லாயிரம் கோடிகளுக்குப் பொருளாராதர பேரிழப்பையும் ஏற்படுத்தியமை மறக்க முடியாத துயராகும்.

ஒரு சில நிமிடங்களில் ஆசியாக் கண்டத்தின் 10 நாடுகளிலும், அவற்றை ஒட்டியுள்ள தீவுகளிலும் இதனால் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர்.

ஆழிப்பேரலை ஏற்பட்டு 18 வருடங்கள் கடந்திருக்கின்றது.. ஆனால் அதன் வடுக்களிலிருந்து இன்னும் இலங்கையின் சில பகுதிகள் மீளாத நிலையிலேயே உள்ளன.

குறிப்பாக கிழக்கிலகையின் அக்கரைப்பற்று நுரைச்சேலையில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சவூதி அரேபிய அரசினால் கட்டப்பட்ட வீட்டுத் திட்டம் இன்னும் உரியவர்களுக்கு வழங்கப்படாது காடு மண்டி அழிந்து காணப்படுவதைக் குறிப்பிடலாம்.
இது கானல் நீரான கதையாகிப் போயுள்ளது. இந்த விடயத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும் தோல்வியடைந்துள்ளனர்.

பேரினவாத சக்திகளின் விடாப்பிடியான துவேச நிலைமைகள், அரசியல் வாதிகளின் பொடுபோக்கு இதற்குக் காரணமாகவுள்ளன.

இதற்கெல்லாம் மத்தியில் 26.12.2022 நினைவிடங்களில் ஈகைச் சுடரேற்றி, விசேட துஆ பிரார்த்தனைகள் செய்து உள்ளக்குமுறலை கண்ணீர் சிந்த வெளிக்காட்டும் நினைவு கூரல்கள் பரவலாக இடம்பெறவுள்ளன.

ஆழிப்பேரலை நினைவு தினம் நாளை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)