
posted 26th December 2022

ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடந்த 2004 ஆம் ஆண்டு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அதன் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு சுமார் ஆயிரத்து முப்பத்து எட்டு பேர் சுனாமி அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டனர்.
பிரதான நிகழ்வு உடுத்துறை சுனாமி பொது நினைவாலயத்தில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
உறவினர்களின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக நிகழ்வு நடைபெற்றது.
பிரதான நினைவுத் தூபிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார், பளை பிரதேச சபைத் தலைவர் சுரேன், மருதங்கேணி பிரதேச செயலர் பி. பிரபாகரமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தேசியக் கொடியை ஏற்றிவைக்கப் பொதுச் சுடரை மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளைப் படைத்து ஒப்பாரி வைத்து ஓலமிட்டனர். இதனால் அப்பகுதி எங்கும் சோகமயமாகக் காட்சி அளித்தது.
இதேவேளை, அனர்த்தத்தில் உயிரிழந்த பலரை அடக்கம் செய்யப்பட்ட உடுத்துறை 10 ஆம் வட்டாரம், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, மணல்காடு ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வடமராட்சி வடக்குப் பிரதேசத்தில் தும்பளை, கிராமக்கோடு ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)