
posted 21st December 2021
யாழ்., காரைநகர் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (21.12.2021) தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்டது.
11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு - செலவுத் திட்டத்துக்குச் சுயேச்சைச் குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 2 உறுப்பினர்கள் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஓர் உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அதன் அடிப்படையில் வரவு - செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டது.
இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.
நேற்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அப்போதைய தவிசாளர் உயிரிழந்ததால் கடந்த மாதம் 10ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைக் குழு வசமானது.
பின்னர் புதிய தவிசாளரால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 8ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் அது நேற்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க. சுகாஷின் முடிவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான காரைநகர் வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயல்பட்ட உறுப்பினர் கட்சியிலிருந்து விலக்கப்படுகிறார் என்று முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தவர் என்பதுடன் வரவு - செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகும் இம்முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House