
posted 26th December 2021
கடல் கோள் அனர்த்தம் ஏற்பட்டு 17 வருடங்கள் நிறைவு பெறுவதையொட்டிய நினைவு தின நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று இடம்பெற்றன. குறிப்பாக இலங்கையின் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் இந்த சுனாமி நினைவு தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் உலகின் 14 நாடுகளில் அனர்தத்தை ஏற்படுத்தியது இந்த அனர்த்தத்தின் போது உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரத்து அறுநூற்று எழுபத்தாறு உயிர்கள் இந்த சுனாமியால் காவு கொள்ளப்பட்டன.
இலங்கையில் முப்பத்தையாயிரத்து முன்னூற்று இருபத்தி இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் குறிப்பாக வட கிழக்கில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதுடன் மருதமுனை அக்பர் கிராமம் முதல் பொத்துவில் வரை ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் இன்று இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளி வாசல்கள், கிறீஸ்தவ தேவாலயங்கள், பௌத்த விகாரைகளில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
முஸ்லிம் பள்ளிவாசல்களில் சுனாமியினால் காவு கொள்ளப்பட்டவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி விசேட துஆ பிரார்த்தனையும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இந்த அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்டவர்களுக்காக கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிகளில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கையில் இன்று அனர்த்த பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் காலியில் சுனாமி பிரதான நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் கால 9.25 மணி முதல் 9.27 மணிவரை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்