சீனாவின் கரிசனையில் சந்தேகமே உள்ளது - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

"தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்துக்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்போது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது."

இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு யாழ். கடற்பகுதிகளையும், மன்னார் சென்று இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள எட்டாவது மணல்திட்டையும் பார்வையிட்டுள்ளார். சீனத் தூதுவரின் இந்த விஜயம் குறித்து சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நாங்கள் சீனாவுடன் பேசியபோது, "நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம்" என்று கூறினார்கள். அதுமாத்திரமல்லாமல், தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது, அங்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும், அவர்களது கோரிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு இலங்கை அரசைக் காப்பாற்றி வந்தார்கள்.

இப்போது, தமிழ் மக்கள் மேல் பரிவுகொண்டவர்கள் போல் நடித்து, மீனவர்களுக்கு உதவி செய்கின்ற போர்வையில், ஒரு தொகுதி வலைகளையும் உலர் உணவுகளையும் கொடுத்த நாடகத்தையும் நாங்கள் அண்மையில் பார்த்தோம்.

வடக்கு மாகாணத்தில் அவர்களது பிரசன்னம் என்பது இந்தியாவைச் சீண்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.

போர்க்காலத்தில் மிக அதிகளவிலான இராணுவ தளபாடங்களையும் விமானங்களையும் கொடுத்து இலங்கையை தனது பெருங்கடன்கார நாடாக்கிய பெருமை சீனாவையே சாரும்.

இவ்வாறு இலங்கைக்கு பல பில்லியன் ரூபாக்களைக் கடனாகக் கொடுத்து அதை கடனாளியாக்கிவிட்டு முழு இலங்கையையுமே கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியிருக்கின்றது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சீன உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தன்னை இறைமை மிக்க நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கை, இப்படி சீனாவின் சகல நடவடிக்கைகளுக்கும் முகம்சுழிக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இத்துடன் நிற்காமல், வடக்கு மாகாணத்தை தனது டிராகன் பிடிக்குள் கொண்டுவரும் நோக்குடன், நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் சீனா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இத்துடன் கடல்சார்துறைகளிலும் தனது நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பது இந்தியாவுக்குக் கூப்பிடு தொலைவிலுள்ள ஒரு பிரதேசம். இங்கு சீனர்களின் பிரசன்னம் என்பதோ, முதலீடுகள் என்பதோ இந்தியாவின் பாதுகாப்புக்குக் குந்தகங்களை ஏற்படுத்தும் என்பது சாதாரண ஓர் அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வடக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படும் முதலீடுகளுக்கு இலங்கை சீனாவுக்கு இடமளிப்பதென்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

கலாசார ரீதியக, மொழி ரீதியாக, சமய ரீதியாக பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புடையவர்கள் இலங்கை, இந்திய மக்கள். குறிப்பாக எமக்கு மிகவும் அண்மித்த பிரதேசமான தமிழகத்தில் எட்டுக் கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆகவே, இந்தியாவுக்கு எதிராக வடக்கு மாகாண மண்ணை சீனா போன்ற நாடுகள் பாவிப்பதற்கு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்க முடியாது" என்றுள்ளது.

சீனாவின் கரிசனையில் சந்தேகமே உள்ளது - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House