
posted 3rd December 2021
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தமையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதுடன் இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் நாட்டில் ஏழைகளுக்கு வீடுகள், கிணறுகள் கட்டிக்கொடுப்பதன் மூலம் அந்நிய செலாவணியை நாட்டுக்கு கொண்டு வந்த, கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட பல இஸ்லாமிய நலன்புரி அமைக்களை மீண்டும் செயல்படுத்துவதன் மூலமும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் இஸ்லாமிய நாடுகளின் தொடர் ஒத்துழைப்புக்களை மீண்டும் பெற முடியும் என்பதை அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் பிரதமருக்கு ஆலோசனை தெரிவிக்கிறோம் என ஐக்கிய காங்கிரஸ்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
இலங்கையை பொறுத்தவரை ஆதிகாலம் தொடக்கம் இலங்கைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் தொடர்புகளும் இருந்து வந்துள்ளது. இதனை ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்திலும் கண்டோம்.
அதன் பின் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த உறவு மேலும் வளர்ந்தது. இஸ்லாமிய நாடுகள் மிகவும் நேசத்தோடு மஹிந்தவை பார்த்தன. நமது நாட்டுக்கு பல உதவிகளை செய்தன. பல பாலங்கள் கட்டுவதற்கும் அரசுக்கு உதவின.
அதே போல் பல தனியார் நலன்புரி அமைப்புக்கள் ஊடாக இஸ்லாமிய நாடுகள் நமது நாட்டு ஏழைகளுக்கும் பல உதவிகள் செய்தன. இந்த உதவிகள் எதுவும் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்க செலவழிக்கப்பட்டதாக அரசால் நிரூபிக்கப்படவில்லை. இந்த உதவிகளால் நாட்டில் அந்நிய செலாவணி கிடைப்பதற்கும் பெரிதும் வழி வகுத்தது.
ஸஹ்ரானின் பைத்தியக்காரத்தனமான செயல் காரணமாக கடந்த அரசு காலத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு பெற்றிருந்த 600 முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல் தனி நபர்களினதும், அமைப்புக்களினதும் வங்கி கணக்குகள் இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டன. உல்லாசத்துறைக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அரபுக்களால் காணிகள் வாங்கப்பட்ட போது அவை இனவாதமாக பார்க்கப்பட்டதால் பல அரபிகள் இலங்கையில் முதலீடு செய்ய அச்சப்பட்டனர்.
அதே போல் முஸ்லிம்கள் எதை செய்தாலும் அதனை பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே சில இனவாதிகளால் பார்க்கப்பட்டு முஸ்லிம்களுக்கெதிராக ஊடக பிரச்சாரம் நடந்தது.
எல்லா சமூகத்திலும் ஓரிரு தீய சக்திகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் முஸ்லிம்கள் மொத்தமாக இனவாத கண் கொண்டு பார்க்கப்பட்டதாலும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை ஊடகங்கள் மூலம் கேவலப்படுத்தப்பட்டதாலும் முஸ்லிம் நாடுகள் இலங்கையை விட்டும் தூரமாகியதன் விளைவை இன்று நாடு அனுபவிக்கிறது. இஸ்லாமிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதில் வடக்கு கிழக்கை இணைக்க துடிக்கும் இனவாத டயஸ்போராவின் ஆதரவில் பல தமிழ் இனவாத அமைப்புக்களும், முஸ்லிம்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும் முஸ்லிம் மத பிரிவுகளும் இவற்றின் பின்னணியில் இருந்தன.
அது மட்டுமல்லாது கடந்த நல்லாட்சி அரசின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட திகன, கண்டி, மினுவாங்கொடை போன்ற தாக்குதல்கள், நமது நாட்டை ஆயுதத்தால் ஆக்கிரமித்த ஆங்கிலத்தை நாட்டு மொழியாக ஏற்ற நிலையில் ஆயுதம் இன்றி நேசக்கரம் நீட்டும் அரபு நாட்டு மொழி காட்சிப்படித்தலுக்கான தடை போன்றவையும் இஸ்லாமிய நாடுகளை நமது நாட்டின் மீது வெறுப்பு ஏற்பட வழி வகுத்தன.
ஆகவே முஸ்லிம்களினதும், முஸ்லிம் நாடுகளினதும் நேசத்துக்கும் அன்புக்கும் பாத்திரமான, பலஸ்தீனத்திலும் அரபு மொழியில் வீதியின் பெயர் உள்ள கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இது விடயங்களை உடனடியாக தனது கவனத்தில் கொண்டு வந்து முஸ்லிம் நாடுகளின் அன்பை பெறும் வகையில் பிரதமர் தலைமையில் இலங்கை இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை புதுப்பிப்பதற்கான ஆலோசனை குழு ஒன்றை அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கும் பட்சத்தில் அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் வழங்க எமது கட்சி தயாராக உள்ளது எனவும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House